கவிஞர் மகுடேசுவரன் ஆசிரியர் குறிப்பு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்னும் வரிக்கு மெய்ச்சான்றாய் வாழ்ந்துவருபவர் கவிஞர் மகுடேசுவரானார். பின்னலாடைத் தொழில் கொடிகட்டிக் கோலோச்சும் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த இவர் தம்முடைய தமிழுணர்வு இழைகளால் மக்கள் மனங்களில் பற்பல வண்ணங்களில் தமிழைப் பின்னிப் பிணைத்துக்கொண்டிருக்கும் தமிழ்நெசவாளர்.

முகநூல் என்பதைத் தமிழ்நூலாக மாற்றிப் பலர்க்கும் படிக்கத் தந்து கொண்டிருப்பவர். உலகச்சந்தையில் எவ்வொரு புதியபொருள் நுழைந்தாலும் அடுத்தகணமே அப்புதியபொருளுக்குக் கவிஞர் மகுடேசுவரனார் என்ன தமிழ்ப்பெயர் சூட்டுவார் என்ற எதிர்பார்ப்பினை முகநூல் தமிழர்கள் கேட்குமளவுக்குத் தமிழினைத் தம் மூச்சாகக் கொண்டு இயங்குகின்ற தமிழ்மொழியறிஞர். தனித்தமிழ் சார்ந்து இயங்கியும் தம் தனித்தமிழ் எழுத்துகளால் பலரையும் தனித்தமிழ் நோக்கி ஈர்த்திழுத்து இயங்கவைத்தும் வழிகாட்டுபவர். வாழ்வே தமிழ் என்பதை உணர்ந்து உணர்த்திக்கொண்டிருப்பவர்.

தாய்மொழியாம் தமிழினைக்கொண்டு வளம் பெறுவது எவ்வாறு என்றும் அறிந்திருக்கும் இவர் அதையும் பலர்க்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறார். பங்குச்சந்தை வணிகம் என்பதைப் பலரும் எட்டாக்கனியாகவும் தொட்டால் சுடும் நெருப்பாகவும் எண்ணி ஒதுங்கியிருக்கையில் அதை எளிமையாக எழுத்தில் கொண்டுவந்து பலர்க்கும் புரிய வைத்தவர். பொதுவாகவே பங்குச்சந்தையின் கலைச்சொற்கள் அச்சமூட்டுபவையாகத்தான் இருக்கும். அவ்வாறான சூழலில் எல்லோர்க்கும் புரியும்படியாகப் பங்குச்சந்தை சார்ந்து பதிவுகள் எழுதிப் பலர்க்கும் பயனுள்ள பொருளாதார வழிகாட்டுபவர். வளம் பெறவும் தமிழ் வேராக இருக்கின்றது என்பதை உரக்கச் சொல்லும் தமிழ்ப்பொருளாளர் இவர்.

தாமறிந்து சுவைத்துத் திளைத்த அமிழ்தமாம் அருந்தமிழை எல்லோரும் அறிந்து இன்புறவேண்டுமென்று எளிமையாக தெளிவாக களிநயமாகத் தமிழினைக் கற்றுக்கொடுத்து வருகின்றார். தாமறிந்து தெளிந்து தேர்ந்து வளமீட்டும் பங்குச்சந்தையினைப் பற்றியும் தெளிவுற எளிமையாகக் கற்றுக்கொடுத்து வருகின்றார்.

காட்சிக்கு எளியன் கடுஞ்சொலன் அல்லன் மாட்சிமைக் குணங்கள் நிறைந்த தமிழ் மாச்செருநன் கவிஞர் மகுடேசுவரனார் என்பதில் தமிழ்த்தாய் பெருமையும் பெருமகிழ்வும் கொள்கின்றாள்.

வாழ்க தமிழ்..! வளர்க தமிழ் ..! வெல்க தமிழ்..!.

மாணவர் பாசறை

கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை, சிங்கப்பூரில் உள்ள ஐயனின் மாணவர்கள் குழுமமாகும். தமிழ் இலக்கிய இலக்கணக் கலந்தாய்வு மற்றும் தமிழ் மொழிச்செம்மையை எடுத்தியம்பும் குழுமமாகும்.

நோக்கம்

தமிழ்

பிழையிலாத் தமிழ்

நற்றமிழ்

தூய தமிழ்

தனித்தமிழ்

செந்தமிழ்

வளர்தமிழ்

வழங்கு தமிழ்

செயல்திட்டம்

இலக்கிய இலக்கணக் கலந்தாய்வு

அருஞ்சொற்பொருள் பதிவு

கலைச்சொற்கள் ஆக்கமும் பதிவும்

மொழிச்செம்மை குறித்த கலந்துரையாடல்