நூல் அறிமுகம்

நூற்தொகுப்பு - தமிழ் அறிவொம்

நூல் - மொழித்திறம்

ஆசிரியர் - கவிஞர் மகுடேசுவரனார்

நூல் அறிமுக உரை: அபிராமி இராமக்கிருட்டிணன்

கவிஞர் மகுடேசுவரனார் கடந்த ஐம்பதாண்டுகளில் தோன்றிய தமிழ் மொழி அறிஞர்களுள் தலையாயவர் என்று உறுதியுடன் சொல்லலாம்.

பல நூல்களையும் கவிதைத் தொகுப்புகளையும் ஆக்கியவர். முகநூலில் தமிழ் குறித்த ஐயங்களை சோர்வின்றி விளக்குபவர். நேர்மறை கருத்துகளை உடையவர்.

தமிழில் இலக்கண இலக்கியங்களை விளக்குவதற்கு இக்காலத்தில் எவருமில்லை என தமிழாசிரியர்கள் பலர் எதிர்மறையாகவே பேசி வந்த காலத்தில் கவிஞர் மகுடேசுவரனார் நேர்மறையாக தொடர்ச்சியாக இயங்கி இக்காலத்திலும் இளைஞர்கள் தமிழ் கற்கவும் ஆய்வு செய்யவும் அணியமாக உள்ளனர் என்பதைத் தொடர்ந்து கூறிவருகிறார்.

இக்காலத்தில் புதிதாகப் புழங்கப்படும் பிறமொழிச்சொற்களுக்குத் தனித்தமிழ் சொற்கள் ஆக்குவதில் வல்லவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே அவர்கட்குப் புரியும் வகையில் உரையாற்றி தமிழ் இலக்கணத்தின் செறிவையும் நம் பேச்சு தமிழில் உள்ள இலக்கியச் சுவைகளையும் இயம்புவதில் கைதேர்ந்தவர்.

கேட்போரின் மனம் புண்படாவண்ணம் தம் கருத்துகளைச் சொல்வதில் ஐயனுக்கு நிகரில்லை.

இப்பணிகளின் தொகுப்பாக ‘தமிழ் அறிவோம்' என்ற நூற்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் நூல் மொழித்திறம். மொத்தம் தொன்னூற்று ஏழு கட்டுரைகள் இதில் இடப்பெற்றுள்ளன.

நம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமலே நாம் பயன்படுத்தும் இலக்கணத்தைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. சோறுதண்ணீ குடிக்கல - சோறும் தண்ணீரும் உம்மைத் தொகை போன்ற எளிமையான இலக்கணம் முதல் புரட்சி (புரள்+சி ) என்ற சொல்லில் வரும் சி என்பது தொழிற்பெயர் விகுதி போன்ற சற்றே கடினமான இலக்கணக் குறிப்புகளும் உள்ளன.

எண்களைத் தமிழில் சரியாக எழுதுவது எப்படி என்றும் “கணிதத் தீபிகை” என்ற நூலைப் பற்றியும் கூறியிருப்பது படிப்போர்க்கு ஊக்கமளிக்கும்.

சிற்றூர் மக்களின் மொழியில் உள்ள இலக்கியச் சொற்கள் குறித்து ஆசிரியர் கூறியிருப்பது உண்மையிலேயே வியப்பைத் தருகிறது. வலி மிகுதல் போல மெலி மிகுதல், கள் விகுதி, அர் விகுதி, எண்ணுப் புணர்ச்சி மற்றும் பல அரிய குறிப்புகளை ஆசிரியர் வெறும் நூறே பக்கங்களில் சுருங்கச் செல்லி விளங்க வைத்துள்ளார்.

இலக்கணம் என்பது கெடுபிடியாக மிகவும் கண்டிப்பான சூழலில் எழுத்து முதல் யாப்பு வரை ஒவ்வொரு படியாக ஏறுவேன், முடியவில்லையெனில் பாதியில் விட்டுவிடுவேன் என்ற மனநிலை உடையோர்க்கும் இந்நூல் படிக்கல்லாக இருக்கும்.

இலக்கணம் என்பது வாழ்வில் இரண்டறக் கலந்தது. அதைத் தேடி அடைதல் களிநயமான வினை என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் ஒருமுறைமேனும் இந்நூலைப் படித்துவிடுங்கள். அந்த துய்ப்பு உங்களை “தமிழ் அறிவோம்” வரிசையிலுள்ள பிற நூல்களையும் தேடிப் படிக்க வைக்கும்.

நூல்: மொழிப்படிக்கட்டு

ஆசிரியர்: கவிஞர் மகுடேசுவரனார்

நூல் அறிமுக உரை: நல்லாண்

மொழியின் தொன்மையையும் செழுமையையும் அறிந்துகொள்வதற்கு அம்மொழியின் அடிப்படைக் கட்டமைப்பையும் இலக்கண விதிகளையும் அறிந்துகொள்வது முதன்மையானது.

ஐயன் மகுடேசுவரனாரின் “தமிழ் அறிவோம்” நூற்தொகுதி இனிவரும் எக்காலத்திற்கும் தமிழின் தொன்மையையும் செம்மையையும் அதன் தளர்வில்லா இலக்கணக் கட்டமைப்பொடு விளங்கவைக்கும் அரும்படைப்பாகும்.

“தமிழ் அறிவோம்” தொகுப்பின் மூன்றாம் நூல் “மொழிப்படிக்கட்டு” ஆகும். தமிழ்மொழியின் சொல் மற்றும் எழுத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் அதன் கூறுகளையும் எளிமையாக விளங்கவைக்கும் நூல்.

தமிழ் மொழியின் வரலாறு குறைத்துச்சொன்னாலும் இருபதாயிரம் ஆண்டுகள் இருக்குமென்று அறுதியிட்டுக் கூறுகின்றனர். மொழியின் தொடக்கநிலையிலிருந்து ஒரு சொல்லின் தோற்றுவாய் என்னவாகயிருக்கும் எனபதை இந்நூல் விளக்குகிறது அதில் முதன்மையாக இருப்பது பெயர்ச்சொல்.

இவ்வாறாக சொல்லின் அடிப்படையாகப் பெயர், வினை, இடை, உரிச்சொற்களை விளக்குகிறது மொழிப்படிக்கட்டு.

அடுத்ததாக எழுத்து வகைகளின் அடிப்படையான முதலெழுத்துகளையும் சார்பெழுத்துகளையும் எளிமையாகவும் விரிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. உயிரும் மெய்யுமாக முப்பதும் முதலெழுத்துகள் ஏனைய இருநூற்றுப்பதினேழும் சார்பெழுத்துகள்.

முதலேழுத்தும் சார்பெழுத்தும் சார்பெழுத்தின் பத்துவகைகளையும் அறிந்தபின்பு நமக்கு நம் தாய்மொழியின் அடிப்படைக் கூறுகள் விளங்கியதால் பேருவகையைத் தருகிறது. பள்ளிப்பருவத்தில் மதிப்பெண்ணிற்காகப்பயின்ற தமிழின் எழுத்து சொல் அடிப்படைகளை இங்கு நாம் கற்றுத்தெளிந்தபின் நம் தமிழின் செம்மையும் வலுவான இலக்கண கட்டமைப்பும் விளங்குகிறது.

புதிய தனித்தமிழ்ச்சொல்லாக்கத்தைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட்ட வியப்பளிக்கும் ஒரு செய்தியுடன் நிறைவு செய்கிறேன். தமிழில் வினைச்சொற்களைப் புதிதாக உருவாக்க முடியாது அஃதே நம் தாய்மொழியின் காலங்கடந்த நிலைத்தன்மைக்குக் காரணமாக அமைகிறது. ஆனால் புதியத் தொழிற்பெயர்களை உருவாக்க முடியும் அதுவே தமிழின் சீரிளமைக்கும் காரணமாக அமைகிறது. எடுத்துக்காட்டாக கடந்தக்கிழமை ஐயன் உருவாக்கியளித்த “தப்பல்கொலை” ஒரு புதியத் தனித்தமிழ் தொழிற்பெயராகும்.

“தமிழ் அறிவோம்” நூற்தொகுதி தமிழர்க்கு வாழ்நாள் கையேடாக இருக்கும்.

நூல்: இலக்கணத் தொடக்கம்

ஆசிரியர்: கவிஞர் மகுடேசுவரனார்

நூல் அறிமுக உரை: வெற்றிச்செல்வன் இராசேந்திரன்

கவிஞர் மொழியறிஞர் மகுடேசுவரன் அவர்களின் தமிழ் அறிவோம் நூல் தொகுப்பின் ஐந்தாம் தொகுப்பான இலக்கணத் தொடக்கம் என்ற தொகுப்பின் நூலறிமுகம்.

தமிழர்களாகிய நாம் நம் மொழியை எவ்வாறு பேசுகிறோம், புழங்குகிறோம், உண்மையில் நாம் இலக்கணத்தோடுதான் பேசுகிறோமா என்ற கேள்விக்கெல்லாம் விடையாய் அமைந்துள்ளது இந்நூற் தொகுப்பு.

வளர்ந்து வரும் அறிவியல் மாற்றத்தில் நாம் நமது மொழியை எந்த இடத்தில் வைத்துள்ளோம், இப்போது எந்த நிலையில் உள்ளது என்றால் எல்லோர்க்கும் எளிதில் தெரியும். இன்று பொது மக்கள் யாவரின் பேச்சிலும் பிற மொழிகள் கலந்து விட்டதையும், ஏன் அதையும் அவர்கள் அறியாமலே பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசும் போக்கு வெகு இயல்பாகவே வந்துவிட்டது.

இத்தகையை சூழ்நிலையில் நம் மொழியின் எதிர்காலம் எத்தகையை நிலைக்குச் செல்லும் என்பதற்கெல்லாம் இந்நூற் தொகுப்பு ஓர் ஊற்றுக்கண்.

உண்மையில் நாம் இயல்பாக பேசும் தமிழ்மொழியில் நாம் இலக்கணத்தோடுதான் பேசுகிறோம் என்பதை, இந்நூல் வழியே அதற்கான பாதையை எளிய முறையில் ஆசிரியர் நமக்கு எடுத்துரைக்கிறார். உண்மையில் ஆசிரியரின் தமிழ் வழிக் கற்றல் வகுப்பில் ஆசிரியரோடு பயணித்திருந்தால் இந்நூற் தொகுப்பைப் படிக்கும்போது அவரோடு உரையாடுவது போலவே நமக்குத் தோன்றும். தமிழர்களின் அரும்பெரும் இலக்கண நூலான நன்னூல் மற்றும் தொல்காப்பியம் படிக்காதோர் இந்நூலைப் பயின்றாலே மிக எளிதில் நம் மொழியைப் பற்றிய பேருண்மையைக் கண்டடையலாம்.

இன்றைய காலத்தில் இளைஞர் கூட்டத்திடையே கண்மூடித்தனமான தமிழ்ப் பற்று உள்ளது. ஆனால் அவற்றை முறையாக வழிப்படுத்துகிறோமா, அல்லது அறிவார்ந்த தேடலின் வழி மொழியின் வளத்தை ஆராய்ந்து பேசுகிறோமா என்றால் பெரும்பாண்மையாக இல்லை என்றே சொல்லலாம். நம்மிடம் இருக்கும் மொழியுணர்வு போற்றத்தக்கது. ஆனால் கண்மூடித்தனமாக இல்லாமல் மொழியை நாம் ஆராய்ந்து பேசி, எழுதிப் பழக வேண்டும்

இப்போதெல்லாம் தனித்தமிழ் ஆர்வம் பெருந்திரளான இளைஞர் கூட்டத்திடையே வளர்ந்துள்ளது. அப்படியான இளைஞர்களுக்கு இந்நூற் தொகுப்பானது பாலைவனத்தில் அலைபவன் கண்டுணர்ந்த நீர் ஊற்று போல்.

இயல்பாக புழங்கும் வட்டார வழக்குச் சொற்களே நமது மொழியின் பலம். அதில் எந்தப் பிழையும் இல்லை என்று கூறி, ஆசிரியர் நம் அருகே நின்றே இந்நூல் வழியே விளக்குகிறார்.

வெறுமனே மொழிப்பற்று மட்டும் நம்மை வளரச் செய்யாது. இதுபோன்ற நூல்களை படிப்பதன் வழி நாம் அடுத்த நிலையை அடையாளம் ஏன் கொஞ்சம் மெனக்கட்டால் மொழியறிஞராகக் கூட ஆகலாம்.

ஒரு சொல் இயல்பாகவே எவ்வாறு இலக்கணத்தோடு அமைகிறது. இலக்கணம் என்றால் என்ன, இத்தனை காலம் நம்மொழி எப்படி இவ்வாறு செழுமையாக உள்ளது என்பதற்கு இலக்கணத்தையன்றி வேறொன்றை விரல் நீட்டிச் சொல்ல இயலாது. தமிழ்மொழியில் இலக்கணம் நம்மோடு இயல்பாக ஒன்றி வருவது நம் மொழியின் அருட்பெருஞ் சிறப்பு. இலக்கணத் தொடக்கம் என்னும் இந்நூல் நம் வீட்டிலும், நம் பிள்ளைகளிடமும் இருக்க வேண்டிய இன்றியமையாத நூல்.

நூல் - வடசொல் அறிவோம்

ஆசிரியர் - கவிஞர் மகுடேசுவரனார்

நூல் அறிமுக உரை: அபிராமி இராமக்கிருட்டிணன்

அ: என்னடி முகம் ஒரே ஜொலிப்பா ஜொலிக்குது?

ஆ: ஆமாக்கா கல்யாணம் நிச்சயமாயிட்டு

நிச்சயதார்த்தம் அடுத்த வாரமே.புதன்கிழமை பத்தாம் தேதி

ஆ: நல்லதுடி அதிக நாள் இல்லையே, வாத்தியாருக்குலாம் சொல்லியாச்சா. உங்க வீட்ல பூசைலாம் நிறைய செய்வாங்களே. மாப்பிள்ளை கிராமமா நகரமா?

அ: சென்னைக்கா.

ஆ: அதிர்ஷ்டகாரிடி நீ ! என் துரதிர்ஷ்டம் என்னால் நிச்சயதார்த்தத்திற்கு வர முடியாது. கல்யாணத்திற்கு வந்து விடுகிறேன்.

இந்த உரையாடலில் எத்தனை வடசொற்கள் உள்ளன என எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் விடை வடசொற்களே இல்லையென்றோ அல்லது ஐந்திற்கும் உள்ளாகவோ இருந்தால் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் ‘வடசொல் அறிவோம்'.

நாம் பேச்சிலும் எழுத்திலும் அறிந்தோ அறியாமலோ பல வடசொற்களைப் பயில்கிறோம். அவற்றைக் களைவதற்கான வழி என்ன? எவை வட சொற்களென முதலில் தெரிந்தால்தானே களைய முடியும்.

ஆசிரியரின் முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளபடி மறைமலையடிகளின் மகளார் நீலாம்பிகை அம்மையாரின் ‘வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்' கைவிளக்கு என்றால் இக்காலத்திற்கேற்ப எழுதப்பட்டுள்ள இந்நூல் சுருக்கமான கையேடு எனலாம். மிகச் சிறிய நூல்தான். ஆழ்ந்துப் படித்தாலும் ஓரிரு நாள் களில் முடித்து விடலாம்.

நாம் வழங்கும் வடசொற்களில் பெரும்பாலானவை வழிபாடு மற்றும் காலநேரம்தொடர்பானவையென்றும், அவற்றிற்கான தமிழ்ச் சொற்களும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

பூஜையை பூசை என்று எழுதினாலும் வழிபாடுதான் சரியான தமிழ்ச்சொல் என்றும் வாரம் என்பதை கிழமை என்றும் சொல்லவேண்டும் என்பதும் இந்நூலைப் படித்தவுடன் புலனாகிறது.

வடசொற்களைக் கண்டறிவதற்கான சில

குறிப்புகள் இந்நூலிலிருந்து:

1. ஓ எழுத்துகளில் வடசொற்கள் தொடங்குவதில்லை.

2. துர், உப, அப என்று தொடங்கினால் வடசொல்

3. அ என்ற முன்னொட்டு மூலம் எதிர்ச் செல் இருந்தால் அவை வடசொல்லாகவே பெரும்பாலும் இருக்கும்.

எ.கா: சுத்தம் - அசுத்தம்

4. தமிழில் ஒரு வினையை உருவாக்கவே முடியாது என்பதால் பூசித்தான் என்றொரு சொல் இருந்தால் அதன் பெயர்ச்சொல் பூசை வடசொல்தான் என்ற முடிவுக்கு வரலாம்

5. தனிக்குறிலை அடுத்து ‘ர்’ இரண்டாம் எழுத்தாக வந்தால்

6. சகர வரிசை சொற்களை ஆராய்ந்தே தமிழா, வடசொல்லா என அறிய முடியும்

7. ரகர வரிசையில் தொடங்கினால் கட்டாயம் வடசொல்தான்

8. ஷ, ஜ, ஸ, ஷே போன்ற வடமொழி எழுத்துகள் ஒரு சொல்லில் இருந்தால் கட்டாயம் வடசொல்தான். சிலர் ‘ட’ போட்டு தற்பவமாக்கி எழுதுவர். தமிழில் நல்ல சொல் இருக்கும்போது வினைகெட்டு தற்பவமாக்கத் தேவையில்லை என்று ஆசிரியர் கூறியிருப்பது மிகச்சரி .

விஷயம்-விடயம் என்பதைவிட செய்தி எனலாமே.

இவை மட்டுமல்ல. இன்னும் பற்பல செய்திகளை உள்ளடக்கியது இந்நூல். மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். இந்நூலைப் படிப்பவர்கள் படித்து முடித்துவிட்டு அறிமுக உரையாடலில் உள்ள வடசொற்களை மீண்டும் எண்ணிப் பாருங்கள். வியப்பு காத்திருக்கிறது!

நூல்: மொழிவளப்பேழை

ஆசிரியர்: கவிஞர் மகுடேசுவரனார்

நூல் அறிமுக உரை: நல்லாண்.

தமிழ் அறிவோம் நூற்தொகுதி தமிழர்க்குக் கிடைத்த அறிவொளி. வளர்ந்துவரும் உலகமயம், நாகரீக வளர்ச்சி மற்றும் பிறமொழி தாக்கங்களினால் ஏற்படுகின்ற மொழிக்கலப்புகளை எதிர்கொள்ளும் சூத்திரங்களை இயல்பான நடையில் எளிமையாக விளங்கும் வகையில் ஆசிரியர் இந்நூற்தொகுப்பைப் படைத்தளித்துள்ளார்.

மொழிவளப்பேழை எனும் நூலில் ஆசிரியர் நம் அன்றாட வாழ்விலும் எளிய மக்களின் பேச்சு வழக்கிலும் இயல்பாக அமைந்த தமிழ் இலக்கணச்செம்மையும் மேலும் நம் பேச்சுவழக்கிலமைந்த கலைச்சொற்களையும் அடையாளங்கண்டு தமிழ் எவ்வாறு தமிழரின் வாழ்வில் செம்புலப்பெயல்நீராக பிணைந்துள்ளது என்பதை விளக்குகிறார்.

எடுத்துக்காட்டாக நாம் இயல்பாகப் பேசும் படிப்பன் நடப்பன் ஓடுவன் என்பது கொச்சை வழக்காகத் தெரிந்தாலும் படிப்பேன் நடப்பேன் ஓடுவேன் என்ற செம்மை வழக்குப்போலவே நடப்பன் போன்றவையும் பேச்சு வழக்கில் அமைந்த செம்மை என்பதை விளக்குகிறார் ஏனெனில் “ஏன்” என்பதைப்போலவே “அன்” என்பதும் “தன்மை ஒருமை வினைமுற்று விகுதி” என்பதை ஆசிரியர் எளிய நடையில் விளக்கியிருப்பது நமக்கு என்றும் மறவாது.

இவ்வாறாக மொழிவளப்பேழை நம் தமிழின் தனிச்சிறப்பையும் நமக்கு இருக்கும் அறியாமையை நீக்கி பெருமைக்கொள்ளச்செய்கிறது. மாணவப்பருவத்திலிருந்தே நாம் பயிலவேண்டிய இன்றியமையாத நூற்தொகுப்பு தமிழ் அறிவோம்.

நூல்: சொல் என்னும் உயிர்விதை

ஆசிரியர்: கவிஞர் மகுடேசுவரனார்

நூல் அறிமுக உரை: பூ.ஆசு

சொல் எனப்படுவது யாதெனில் பொருள் தரக்கூடிய எழுத்துகள் அனைத்தும் சொல் என்ற வரையறைக்குள் அகப்படும்.

மொழியின் ஏற்றத்திற்கும் நீடித்து நிலைபெறுவதற்கும் சொற்கள் இன்றியமையாதவை. காலத்தின் வளர்நிலைக்கேற்ப எம்மொழி தம்மை தகவமைத்துக்கொண்டு புதிய சொற்களைத் தோற்றுவித்து மொழி மாந்தர்களோடு இயல்பாக வழங்கு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் புழங்குகிறதோ அம்மொழியே எக்காலத்துக்கும் இடர்நிலையையும் இடைநிற்றலையும் தாண்டி உயர் நிலைபெற்று உயிர் வாழும் என்கிறது இந்நூல்.

மொழிக்காக எதுவும் செய்ய வேண்டாது அன்றாட வாழ்வில் நம்மிலிருந்து சிதறி விழுகிற ஒவ்வொரு சொல்லும் அந்நிய மொழிக் கலப்பின்றி அமுதத் தமிழிலேயே வெளியில் விழுந்தால் போதுமானது. நம் பல் என்னும் மருத்துவரால் அறுவைச் சிகிச்சை செய்து உயிரோடு வருகிற சொற்கள் யாவும் அன்னைத் தமிழாக இனியிருக்க உறுதி ஏற்போம்.

எவ்வகைக் கலைச்சொல்லாயினும் புணர்ச்சி இலக்கணபடி பிறந்தால்தாம் நம்மொழியோடு தாக்குப்பிடித்து நிற்கும். இல்லையெனில் சொல்லாமல் கொள்ளாமல் வழக்கிலிருந்து வாழ்விழந்துவிடும். மொழி வினைத்தொகை என்னும் தன் கருப்பையினால் கருவுற்ற புணர்ச்சி விதிக்குள் உட்பட்டு சொல் என்னும் உயிர் விதையை ஈன்றெடுத்து வருகிறது தொன்று தொட்டு என்பதை நூலாசிரியர் தெளிவாக உணர்த்துகிறார் .

தமிழ்மொழியில் நாற்பத்து இரண்டு ஓரெழுத்துகள் ஒரு சொல்லாகவே மாறி பொருள் தருகின்றன. நம் மொழியில் குற்றியலுகரச் சொற்கள்தாம் பெரும்பான்மை கொண்டவையாகும். ஆகவே பெரும்பான்மை மக்கள் பேசும், பேச்சு வழக்கில் ஆளப்படுகிற பெரும்பாலான சொற்கள் குற்றியலுகரம் வகையிலே குறுகி ஒலிக்கிறோம். அதாவது சொல்லின் முழுமையான ஒலிப்பில் ஒலிப்பதில்லை.

வட்டார வழக்கில் அவ்வாறுதான் எளிய மனிதர்கள் நாளும் பேசுகிறார்கள். வட்டார வழக்கில் பேசப்படும் சொற்களில் உச்சரிப்பு நீட்டலும் குறுகலுமாய் இருக்கிறதேயொழிய முற்றிலுமாக இலக்கண முறையைச் சிதைப்பதாக இல்லை. பேச்சு வழக்கில் மொழி இயல்பாய் இடரில்லாமல் வாழ்கிறது என்கிறார் ஐயன் அவர்கள்.

மொழியைக் கசடறக் கற்க விரும்பும்

தமிழர்களைத் தமிழ் அறிவோம் தொகுதிகள் கட்டாயம் மொழிப்புலமை மிக்க மாந்தராய் உயர்த்தும் என்பது என் மனச்சான்று. தமிழிலக்கண முறைப்படி கற்றுணர்ந்த மொழியியல் அறிஞராய் மெருகேற்றவும் இந்நூல்கள் பெரிதும் உதவும். தமிழ் மொழி என்பது வினைச்சொல் மொழியாகும் வினை என்பது வேர்ச்சொல் ஆகும். தமிழில் பல பெயர்ச் சொல்லை உருவாக்கலாம் ஆனால் ஒரு வினைச்சொல்லை உருவாக்கயிலாது என்பதை இந்நூல் வழியாக விளக்குகிறார் நூலாசிரியர்.

தமிழ்மொழியில் பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்ப அதன் எழுத்து வடிவம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது இன்னும் பிற்காலத்தில் கூட எழுத்தின் வடிவம் மாறலாம். அது எல்லா மொழியிலும் நிகழலாம். ஆனால் மொழியின் ஒலிப்புத் தன்மைகள் எக்காலத்திற்கும் மாறாத்தன்மை கொண்டதாகும். ஆனால் ஒரு மொழியின் எழுத்து அக்காலத்திற்கேற்ப அம்மொழி மாந்தர்களின் வளர்ச்சிக்கும் மொழியின் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு வடிவங்கள் மாறலாம். தொழில் நுட்பங்கள் பெருக பெருக அதன் பயன்பாட்டிற்கேற்ப அதன் வடிவங்களும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படலாம். சொற்களின் ஒலிப்பும் ஓசையும் மாற்றவியலாதது என்பதும் இந்நூல் நமக்குச் சொல்லுகிற பாடம்.

தமிழர்களின் வழக்கம் தன் பெயருக்கு முன்னால் ஊரின் பெயரைக் குறிப்பிட்டு தன்பெயரை எழுதி வந்துள்ளனர் தொன்று தொட்டு. பின்பு பெயருக்கு முன்னால் தாயின் முதலெழுத்தைப் போடும் பழக்கமும் நம்மொழியின் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் தந்தையின் பெயரின் முதலெழுத்தைத் தலையெழுத்தாகப் பயன்படுத்தும் வழக்கம் நம்மொழியில்லை. அதேபோல் சாதிப் பெயரை முன்னொட்டாகவோ,

பின்னொட்டாகவோ பயன்படுத்தும் வழக்கமும் நம்மொழியில்லை. இடைகாலத்தில் இவை எல்லாம் நமக்குள் வந்தவையே. நமது சங்க இலக்கியங்களில் புலவர்களின் பெயர்க்கு முன்னொட்டாக ஊரின் பெயர் தாங்கி நிற்கிறது நாம் அறிந்தவைதான். தற்போதும் மலையாள மொழி பேசுகிறவர்களிடம் தாயின் பெயரை முன்னொட்டாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது‌. இவ்வழக்கம் நம்மில் இருந்து சென்றதுதான் வரலாற்றுத் தரவுகளோடு கட்டுடைக்கிறார் இந்நூலில்.

பேச்சுத் தமிழில் நாட்டுப்புறத்தில் பொறத்தாண்ட என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்.

"எங்க நாய் என் பொறத்தாண்டியே வந்துட்டிருக்கும் 'எப்பப் பார்த்தாலும் என் பொறத்தாண்டியே வராதே' 'அவன் பொண்டாட்டி பொறத்தாண்டியே திரியறான் 'வீட்டுக்குப் பொறத்தாண்டயே மரம் வளர்க்கறோம்.

கிராமத்தில் நம் மக்கள் இவ்வாறு பேசுவதைக் கேட்டிருப்பீர்கள் பொறத்தாண்டி, பொறத்தாண்ட என்பதைக் கூறுவதற்குக் கூச்சப்படுகின்ற புதிய தலைமுறை யினர் அச்சொல்லைத் தவிர்க்கின்றனர்

அப்படித் தவிர்ப்பதால் ஏற்பட்ட நிகழ்வு நம்மொழியைக் கொலை முயற்சிக்கு உட்படுத்தி பல்வேறு சொற்கள் வழக்கிலிருந்து வாழ்வை முடித்து வைத்த தலைமுறையாய்த் திரிகிறோம். நாகரிகம் என்ற பெயரில் எத்தனையாயிரம் சொற்களை நாம் பயன்படுத்த தவறியதால் அழகிய சொற்களெல்லாம் மருவி அந்நிய மொழிக் கலப்பில் அன்றாடம் உழலுவதை விளக்கங்களோடு வீறிட்டு உணர்த்துகிறார்.

'புறத்தை அண்டி' என்கின்ற தூய்மையான தமிழ் வழக்குத் தான் பேச்சுவழக்கில் 'பொறத்தாண்டி ' ஆகிறது. நாய் என் புறத்தை அண்டியே வந்துகொண்டிருக்கும்.

'புறத்து அண்டை' என்பதுதான் 'பொறத்தாண்ட ஆகிறது வீட்டுக்குப் புறத்து அண்டையிலேயே மரம் வளர்க்கிறோம்

பேச்சுத்தமிழில் ஓர் அரிய சொற்றொடரின் பயன்பாடு தொடர்ந்து வருகிறது. அதை அவ்வாறே வட்டார வழக்கில் பேசுவதற்குத் தயங்கிக் கூச்சப்பட்டால் நம் மொழிக்குத்தான் இழப்பு. தமிழுக்குப் புத்துயிரூட்ட மிகச்சிறந்த வழி பொதுத் தமிழ்ப் பேச்சு வழக்குக்கு வாராமல் வட்டாரப் பேச்சு முறைப்படியே பேசுவது மிகச்சிறப்பு என்கிறார் நூலாசிரியர்.

இந்நூல் தமிழ்பேசும் அம்மாந்தர்களுக்குச் சொற்களின் வேறுபாடுகளிலும் பொருள் கொள்வதிலும் ஏற்படுகிற ஐயங்களைத் தீர்க்கவும் தெளிவூட்டவும் பிறமொழிக் கலப்பில்லாமல் தனித்தமிழைப் பயன்படுத்தவும் புதுச்சொல் உருவாக்கவும் உதவுகிற சாலச்சிறந்த நூலாகும்.

காவிரியில் ஓர் ஆறு கலக்குமிடத்தில் அவ்வாற்றின் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் அப்படித்தான் பவானி இருக்கிறது. பவானி ஆறு காவிரியில் கலக்குமிடத்தில் இருக்கும் ஊர்ப் பெயர்தான் பவானி. நொய்யல் ஆறு காவிரியில் கலக்குமிடத்தில் நொய்யல் என்ற சிற்றூர் இருக்கிறது அவ்விடத்தில் 'நொய்யல்' என்ற பெயரில் இருப்பூர்தி நிலையமும் உண்டு.

இந்நூலை வைத்துக்கொண்டு காவிரி ஆறு ஓரம் இருக்கிற ஒவ்வொரு சிற்றூரின் பெயர் வேற்றுமொழிக் கலப்பில் இருப்பதைக் கண்டுணரவும் களையவும், களையெடுக்கவும் சிற்றூர்களின் தனித்தமிழ்ப் பெயர்களை மீட்டெடுத்திடவும் இந்நூல் முழுப்பங்காற்றும் என்பது உண்மை.

பொதுத் தமிழ்ப் பேச்சு வழக்குக்கு வரும்போது பிறமொழிச் சொற்களை நம்மையே அறியாமல் நாம் மிகுதியாகத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். ஆகவே அச்சொல்லுக்குரிய தமிழ்ச் சொற்களைப் பேச்சில் நாம் பயன்படுத்தத் தொடங்கினால் நம்மொழியில் படுகிற மொழிமாசு குறையும் நம்மிலிருந்தே தொடங்கிடச் சொல்கிறார்.

தமிழை அழிப்பதற்கு நாம் நம்மையறியாமல் ஓரிடத்தில் தொடர்ந்து துணை போய்க் கொண்டிருக்கிறோம் எண்களைத் தமிழில் சொல்லும் பழக்கத்தை நாம் கைவிட்டதுதான் அது. எண்ணிப் பார்த்தால் நம் அனைவர்க்கும் எண்களைத் தமிழில் சொல்வது மறந்தே போய்விட்டது.

நேரத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில்தான் சொல்கிறோம் மதிப்பெண்களை ஆங்கிலத்தில் சொல்கிறோம். தமிழ் அறிவிப்பு களிலும் ஆங்கிலக் கலப்பு பண்பலை வரிசையில்,தொலைக் காட்சி அறிவிப்புகளில் எங்கும் எண்களைக் குறிக்க ஆங்கிலச் சொற்கள் ஈவிரக்கமில்லாமல் எல்லாவிடங்களிலும் எண்களை ஆங்கிலத்திலேயே சொல்கிறோம் நாம் மொழியுணர்ச்சி மரத்தவர்களாய் அதைக் கேட்டு ஏற்றுக்கொண்டு

நாமும் அவ்வாறே கூறிப் பழகிவிட்டோம். நம்மிடம் எண்களைத் தமிழில் சொல்லும் நம் நினைவுப்புலம் மட்கி நாசமாகப் போய்விட்டது என்று வேதனையடைகிறார்.

'நைன் ஒ கிளாக் கிளம்பி டென் தர்டிக்கு அங்க வந்துடறேன் '

இன்னிக்கு ட்ரெயின் பார்ட்டி மினிட்ஸ் லேட்டாம்.'

இப்படி நாம் பேசுவதால் ஏற்பட்டதின் விளைவால் தமிழ் எண்களுக்கு முடிவுரை எழுதினோம். இனியும் நாம் காலந்தாழ்த்தாமல் தமிழிலே எழுதிப் பழகுவோம் தமிழ் எண்களையும் தமிழில் சொல்லும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளச் சூளுரைப்போம்.

இந்நூலைக் கொண்டே நம்மாலும் நம் முன்னோராலும் சொத்தையாகிய பல்லாயிரம் சொல் விதைகளை மீண்டும் உயிர்க்காற்று கொடுத்து இயல்பு வழக்கில் புழக்கத்திற்குக் கொண்டு வர முடியும் என்பது அறிவார்ந்த உண்மை.

தூய தமிழ் மொழியில் தன் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்காமல் நாகரிக மோகத்தில் பிறமொழிக் கலப்பில் பெயர் வைத்துவிட்டு நாட்டரசுகளைக் குறை சொல்வது பெரும் இழுக்கு.

வடமொழி எழுத்துககளை முதலாம் வகுப்பிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாட்டரசுக்கு கொள்கையேதும் இல்லைதான். வடமொழி எழுத்துகளான ஜ,ஸ,ஷ ஆகியவற்றை ஒன்றாம் வகுப்பிலேயே பாடத்தில் வைக்கும்படி ஆகிறது. மாணவர்களின் பெயரில் ஏதோ ஒரு வடமொழி எழுத்து வந்து விடுகிறது. சுரேஷ்,கிஷோர்,ஜான்சி ராணி,ஐஸ்வர்யா என மாணாக்கர்களின் பெயர்கள் இவ்வாறு இருக்கின்றன. அவர்களுடைய பெயர்களை எழுதப் பழக்குவது ஒன்றாம் வகுப்பில் கட்டாயம். அதனால் வடமொழி எழுத்துகளையும் அறிமுகப்படுத்த வேண்டியதாகிறது. தமிழ்க்குடி மக்கள் அனைவரும் தமிழ் மொழி நீண்டு நீடித்து வாழ இலக்கணக்கூறுகளின்படி பேச வேண்டாது இயல்பு வழக்கில் பேசுங்கள் பிள்ளைகளுக்கும் கட்டாயம் இனிய தமிழிலே பெயர் வையுங்கள் தமிழ் தானாகத் தலைமுறை தாண்டி வாழும்.