நற்றிணை
பாடல் எண் - க
திணை: பாடாண் துறை: கடவுள் வாழ்த்து
மாநிலம் சேவடி ஆகத் தூநீர்
வளைஞரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்புமெய் ஆகத் திசைகை ஆகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்றுஅகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதுஅற விளங்கிய திகிரி யோனே.
-பாரதம் பாடிய பெருந்தேவனார்
அருஞ்சொற்பொருள்:
தூநீர் தூய்மையான நீர் அல்லது தூ என்பதற்கு வெண்மை என்றும் நம் வகுப்பில் பார்த்த்தோம்
தும்பை - வெண்மையான பூ.
வளை - சங்கு
ஞரல் - ஒலிப்பு வளைஞரல் வளைஞரல் - சங்கொலி.
பௌவம் - கடல்
விசும்பு - வானம்
பசுங்கதிர் - திங்களுக்கான அடைமொழி
சுடர் - ஞாயிறு
இயன்ற எல்லம் - வாழுகின்ற (இயங்குகின்ற)
திகிரி - வட்டச்சக்கரம் (நாம் ஏற்கெனவே வகுப்பில் பார்த்த
எளிய நடை:
பெரும் நிலவுலகைத்தன் சிவந்த அடியாகவும்
வெண்மையான சங்குகள் ஒலிக்கின்ற கடலை ஆடையாகவும்
வானமே தன் உடலாகவும் திசைககளே தன் கைகளாகவும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவும் ஞாயிறும் கண்களாகவும்
உயிர்கள் அனைத்திலும் கலந்து இவையாவும் தன்னுள் அடக்கிய ஞானநூல்களின் முதல்வன் என்பவன்
குற்றமற்ற சக்கரப்படையுடையோனே!
* இங்கு சக்கரப்படையுடையவனாக மாயோனைக் குறிக்கின்றனர்.
* ஐம்பெரும் ஆற்றலான வானம், நிலம், நீர், நெருப்பு,காற்று மற்றும் திங்களும் ஞாயிறும் உயிர்களும் உள்ளடக்கியதே இறையாற்றல் என்பது ஆகச்சிறந்த கருத்து.
பாடல் எண் - உ
கபிலர் (குறிஞ்சித் திணை)
தலைவி தோழியிடம் சொன்னது:
நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே
சொற்பொருள்:
நின்ற சொல்லர் நீடு தோறு இனியர் - தான் சொல்லியச் சொல்லிலிருந்து பிறழ்வாதவர், (நீடு - பழகு) பழகுந்தோறும் இனிமையானவர்.
என்றும் என் தோள் பிரிபு அறியலரே - என்றைக்கும் என்னைப்பிரியும் மனமில்லாதவர்.
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப் - (தண்- குளிர்ந்த, தாது - மகரந்தம், ஊதி- உறிஞ்சி, மீமிசை - மிகஉயர்ந்த, சாந்து - சந்தனமரம், தீம்தேன் - இனிய தேன்) - வண்டானது குளிந்த தாமரையின் மகரந்தத்தை உறிஞ்சி மிக உயர்ந்த சந்தனமரத்தில் சேர்த்த இனிய தேன்போல (உவமை)
புரைய மன்ற புரையோர் கேண்மை - (புரை - உயர்ந்த, புரையோர் - உயர்ந்தோர், கேண்மை-நட்பு) - உயர்ந்த சந்தனமரத்தில் சேர்த்துவைக்கப்பட்ட குளிர்ந்த தாமரையின் இனிய தேன்போல தலைவனுடனான நட்பும் ஆகச்சிறந்தது. (உருவகம்)
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி - (நயந்து - விரும்பி) - நீர் இல்லாமல் இவ்வுலகம் இல்லை (உவமை)
தலைவன் இல்லாமல் தலைவியில்லை (உருவகம்)
என்பதை உணர்ந்த தலைவன் தலைவயிடம் விரும்பி அன்பு பாராட்டுவான்.
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே - (நறு - மணம், நுதல் - நெற்றி, பசத்தல் - பிரிவினால் ஏற்படும் பசலை) - தலைவியின் மணம் வீசும் நெற்றியில் பசலை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிப் பிரிவு போன்ற சிறுமையான செயலை அறியாதவர் தம் தலைவன் என்று தலைவி தன் தொழியிடம் சொல்கிறார்.
பொருளுரை:
மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் வாழும் தலைவன் பொருள்தேடவும், காவலுக்காகவும், தூதனாகவும், ஒற்றனாகவும் தன்பணி செய்யும்பொருட்டுத் தலைவியைப்பிரிந்து செல்வது இயல்பே! ஆயினும் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியைக் கண்ட தோழி தலைவியின் உள்ளமும் தொற்றமும் வாடிப்போயிருப்பதை உணர்த்துகிறார். அதற்குத் தலைவி தொழியிடம், தன் தலைவன் சொன்ன சொல்லில் மாறாதவர், பழகுந்தோறும் இனிமையான பண்புடையவர், என்றென்றும் என்னைப் பிரியும் மனமில்லாதவர் என்று தலைவனின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.
தாமரையின் குளிர்ந்த மகரந்தத்தைத் தேனீ கொய்து மிக உயர்ந்த சந்தனமரத்தின் உச்சத்தில் கட்டிய தேன்கூட்டில் சேர்த்துவைத்த தேன்போல உயர்ந்த பண்பினையுடைய தலைவனுடன் தான் கொண்ட நட்பும் உயர்வானது என்று உவமையுடன் தெரிவிக்கிறார். மேலும் “நீரின்றி அமையா உலகு” என்ற பொன்மொழியை உவமையாகச் சொல்லி அதுபோலவே தலைவனின்றி தலைவியில்லை என்று தங்களுக்கிடையேயான காதலையும் வெளிப்படுத்துகிறார்.
பிரிவினால் ஏற்படும் பசலை தலைவியின் மணம்பொருந்திய நெற்றியில் வந்துவிடும் என அஞ்சி சிறுமையான பிரிவு பாராட்டுதலை தன் தலைவன் செய்யமாட்டார் என்று தங்களுக்கிடையேயான அன்பின் மிகுதியையும் காட்டுகிறார்.
குறிஞ்சித்திணையின்கண் வாழ்ந்த தலைவன் தலைவியின் அறத்துடனான காதல் வாழ்வை இப்பாடல் காட்டுகிறது.
நற்றிணை 3
தொடர்புக்கு
+6597844478
+6590024010
முகவரி
kmmp727@gmail.com