ஆசிரியரின் இலக்கிய உரைகள்
க. வாழும் தமிழ்!
உ. மொழியும் கவிதையும்
க. வாழும் தமிழ்!
பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவில் 'வாழும்தமிழ்' என்ற தலைப்பில் கவிஞர் மகுடேசுவரனார் மொழி குறித்து ஆற்றிய ஓர் அருமையான செம்மையான உரையை இங்கே எழுத்து வடிவில் படித்துத் துய்க்கலாம்.
OO
உரை : மகுடேசுவரன்
எழுத்தாக்கம் : பழ.மோகன்
OO
"யாண்டு பலவாக, நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனையொடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்டனையர் என் இளையர் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க, அதன்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே."
என்று பிசிராந்தையார் சொல்கிறார். அத்தகைய ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழும் திருநெல்வேலி மண்ணை நான் முதற்கண் வணங்குகிறேன்.
'வாழும் தமிழ்' என்று நான் பேசுகின்ற இந்த மொழியைப் பற்றிய உரையில் பிற எல்லாரையும் விட நெல்லை மக்களாகிய உங்களுக்கு மிகவும் உரிமை உண்டு. ஏனென்றால் இது இந்த மொழி தோன்றிய இடம் . இந்த நிலம் அகத்தியனும் தொல்காப்பியனும் உலவிய இடம். இந்த மண்ணில் பாண்டிய மன்னன் உலவியிருக்கிறான். மூன்று தமிழ் மன்னர் இருக்கின்றனர். அம்மூவரும் சேரன்,சோழன்,பாண்டியன் என்று சொல்லப்பட்டாலும் ஒவ்வொருவர்க்கும் ஒரு சிறப்புப் பெயர் உண்டு. சேரனை மலைநாடன் என்பர். சோழனை வளநாடன் அல்லது நீர்நாடன் என்பர். பாண்டியன் ஒருவனைத்தான் தமிழ்நாடன் என்பர். அவன்தான் இந்த மொழிக்குச் சங்கம் வைத்துக் காத்தவன். அதனால்தான் அவனை மொழியோடு தொடர்புபடுத்தித் தமிழ்நாடுடையவன் என்று சொல்லுவார்கள். இந்தத் தமிழ்நாட்டில் வந்து தமிழ் குறித்துப் பேசக் கிடைத்த வாய்ப்பை நான் அரும் வாய்ப்பாகக் கருதுகிறேன்.
ஒவ்வொரு மொழிக்கும் வேற்றுப்பெயர் இருக்கும். தமிழுக்கும் வேற்றுப்பெயர் உண்டு. அந்த வேற்றுப்பெயர் என்னவென்றால், இந்த நிலத்தைக் குறிக்கின்ற தென்மொழி என்பதுதான். இந்தத் தென்னாடு, இந்தத் தென்னிலம், இந்தத் தென்மொழி இவையனைத்திற்கும் மிகவும் நெருக்கமுடைய பொருள் தொடர்பு இந்த ஊருக்கு, இந்த நிலத்திற்கு, இந்த மண்ணிற்கு உண்டு. இந்த இடத்தில் தமிழைக் குறித்துப் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
மக்களே.! அன்பர்களே.! நண்பர்களே..! உங்களிடம் மிகவும் பழைய பொருள் இருக்கும். அது உங்கள் வீட்டில் இருக்கலாம், உங்கள் கையில் இருக்கலாம்,உங்கள் உடைமையாக இருக்கலாம். மிகமிகத் தொன்மையான ஒரு பொருள் உங்களிடம் என்ன இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். அது ஒரு பழைய மரப்பொருளாக இருக்கலாம், ஒரு கட்டிலாக இருக்கலாம், ஏதேனும் ஒரு சிறுபொம்மையாகக்கூட இருக்கலாம். இன்னும் பழைய, இன்னும் தொன்மையான பொருள் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருக்கிறதா என்று எண்ணிப் பாருங்கள் இருக்கிறது. ஆம், அது உங்கள் மொழியாகிய தமிழ். உங்கள் நாவில் உலவும் இந்தத் தமிழ்மொழி தொன்மையானது, பழைமையானது, நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பழைமையுடையது.
எண்ணிப் பாருங்கள் ! கடந்த ஒரு நாற்பதாண்டுகளாக வாழ்க்கை எல்லா மாற்றங்களையும் கண்டுவிட்டது. இருபதாண்டுகளுக்கு முன்பு கைப்பேசி கிடையாது. இன்னும் இருபதாண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி கிடையாது. இன்னும் இருபதாண்டுகளுக்கு முன்பு வண்டி,ஊர்திப் பெருக்கமில்லை. ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியா? இன்னும் ஓர் எண்பதாண்டுகளுக்கு முன்பு உடைகள்கூட, காலுக்குச் செருப்புகூட அரிதாக இருந்த காலகட்டம். இன்னும் நூறாண்டுகளுக்கு முன்பு எல்லாம் அப்படி அப்படியே நிலையாக நிலைத்துநின்ற ஒரு காலகட்டம். இந்த நூறாண்டுகளைத்தான் தொடர்ச்சியான மாற்றங்களின் காலகட்டமாகக் கருதமுடியுமே தவிர அதற்கும் முன்பான ஆயிரம் ஆண்டுகளை, இரண்டாயிரம் ஆண்டுகளை, பத்தாயிரம் ஆண்டுகளை ஒரே போலத்தான் நாம் பார்க்கமுடியும். நண்பர்களே..! ஆப்பிரிக்காவினுடைய நமீபியா தேசத்தின் மக்களை ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள், கடந்த இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த மக்களில் மூத்தவர் ஒருவர் எப்படி இருந்தாரோ அதே போலவே இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த முன்னேற்றமும் போய்ச் சேரவில்லை. அவர்கள் பிற நாகரிகங்களால் பாழ்படவில்லை அவர்களுடைய மூதாதைகள் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள், ஆப்பிரிக்க நாட்டிலுள்ள ஒரு பழங்குடியினர். நாமும் அப்படி இருந்தவர்கள்தான், கடந்த இருநூறு ஆண்டுகளாக நூறாண்டுகளாக மாறிவிட்டோம்.
நம்முடைய நாகரிகத்தில் நாமும் நிலைத்து நின்றவர்கள். அந்த நிலைப்பில் நம்மிடம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது நம்முடைய தமிழ் மொழி; மிகவும் பழைமையானது. உங்களிடம் இருந்து வருகின்ற ஒரு சொல் உங்களுடைய நூறாண்டு முன்னோன், நூறு தலைமுறை முன்னோன் பயன்படுத்திய சொல். இதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ" என்றொரு சங்கப்பாடல் இருக்கிறதென்றால், அதில் இடம்பெற்ற சொல் இன்றும் அப்படியே பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனை நீங்களே பயன்படுத்துகிறீர்கள் உங்களுடைய நாவில் இன்றும் புரள்கிறது. அப்படியானால் உங்களுடைய பயன்பாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு சொல்லும் பத்தாயிரமாண்டுப் பழைமையுடையது. ஐயாயிரமாண்டுப் பழைமையுடையது. இந்தச் சொற்களை எல்லாம் வைத்துக்கொண்டு நாம் வாழ்கிறோம். இதுதான் நம்முடைய மொழிப்புலமாகக் கட்டமைந்திருக்கிறது. இதனைக் கொண்டுதான் நாம் சிந்திப்போம். இதுதான் நம்முடைய அறிவின் திறப்பானது.
இன்று நாம் புத்தக கண்காட்சிக்கு வந்து வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே புத்தகங்கள் இருக்கின்றன புத்தகங்கள் முழுக்க என்ன இருக்கிறது ? மொழிதான் இருக்கிறது. புத்தகத்தினுடைய உள்ளடக்கம் என்ன ? மொழி. அதற்குள் இருப்பது என்ன ? சொற்கள். நம்முடைய பெயர் என்ன ? அது ஒரு சொல். நாம் நம் கருத்தை எப்படிச் சொல்கிறோம் ? சொல் சொல்லாகச் சொல்கிறோம். அப்படியென்றால் நம் வாழ்க்கை முழுவதுமே இந்தச் சொற்களானவை தலையாய பங்கினை வகிக்கின்றன. ஆனால் நமக்கு அதன் அருமை தெரியாது.
எடுத்துக்காட்டாக, மழை எளிமையாகக் கிடைக்கும், தண்ணீர் எளிமையாகக் கிடைக்கும், காற்று எளிமையாகக் கிடைக்கும். ஆனால் அவற்றினுடைய அருமை தெரியாது. அதுபோல நாம் புழங்குகின்ற இந்த மொழியின் சொற்கள் நம்முடையவை. நாம் அவற்றினுடைய உரிமையாளர்கள். நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம். நம்மை ஆக்கியவை அவை. நம்முடைய அனைத்துமானவை அவை. நம்முடைய சிந்தனைப்புலத்தை உருவாக்கியவை அவை. ஆனால் அது குறித்து எந்த ஓர் உணர்வுமற்று, அனிச்சையாக, ஓர் உணர்வுப்பூர்வமான ஆழ்ச்சியற்று அதனை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இது எல்லோருக்கும் நடப்பதுதான், ஏனென்றால் உங்களுடைய மொழி மனமானது அதனையே ஆய்கின்ற தன்மையை விடுத்து உங்களிடம் இயங்குகின்றது. இதுதான் அதனுடைய பண்பு.
இப்போது பாருங்கள், இந்த மொழியானது ஒரு பத்தாயிரம் ஆண்டுப் பழைமையுடையது என்று வைத்துக்கொள்வோம், இன்று நீங்கள் யார் என்ற கேள்விக்கு இவையெல்லாம் உங்கள் முன்னுள்ள வரலாற்றினுடைய விளைச்சல் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய பேச்சு; உங்களுடைய சிந்தனை முறை; உங்களுடைய நடை, உடை, தோற்றம்; உங்களுடைய மனப்பாங்கு; உங்களுடைய பண்பாடு இவை அனைத்துமே உங்களுக்கு முன்னுள்ளவர்கள் உங்களுக்குத் தந்து சென்றவை. இதில் மாற்றுக் கருத்தேயில்லை. அப்படியானால் உங்களுடைய உயர்ந்த செல்வமான தமிழ்மொழியும் உங்களுக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள் உங்களுக்குத் தந்து சென்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ அந்த ஒன்று அப்படியே இன்று உங்கள் கையிலிருக்கிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? முடிந்தவரை அதைப் பாழ்படுத்திக் கெடுத்துப் போட்டுவிட்டுப் போய்விட வேண்டுமா? இல்லை. அதனை அவ்வாறே தூய்மையாக, நம்முடைய மூத்தோர் எவ்வாறு நம்மிடம் விட்டுச் சென்றார்களோ, அப்படியே அடுத்த பத்தாயிரம் ஆண்டினர்க்காக நாமும் வழங்கிச் செல்ல வேண்டும். இந்தக் கடமை நமக்கிருக்கிறது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லையல்லவா ? இப்போது நீங்கள் ஒரு விண்மீனைப் பார்க்கிறீர்கள். அந்த விண்மீன் அங்கே ஒளிரும்போதே இங்கு நீங்கள் பார்த்துவிட்டீர்களென்று உறுதியாகச் சொல்ல முடியுமா? இல்லை. ஏனென்றால் அது பல்லாயிரக்கணக்கான ஒளியாண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒளியாக இருக்கலாம். இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இப்போது இந்தநொடியில் அந்த விண்மீன் அவிந்து போயிருக்கலாம். ஆனால் அப்போது எழுந்த அதன் வெளிச்சம் பல ஆண்டுகளாகப் பயணம் செய்து இப்போதுதான் உங்கள் கண்களை வந்தடைகிறது. இது இயற்பியல். அந்தத் தன்மையுடையதுதான் இந்த மொழி, இந்தப் பண்பாடு எல்லாம். அதனோடு தொடர்புடையதுதான் நாம் கொண்டிருக்கின்ற மரபுச் செல்வங்கள் அனைத்துமே. இதை அப்படியே நாம் பிறிதொருவர்க்குக் கடத்திச் செல்ல வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் நமக்கு இருக்கக்கூடாது. அப்போதுதான் தமிழ் வாழும். இது வாழ்ந்த தமிழ். இது வாழ்ந்தது எங்கெங்கெல்லாமோ வாழ்ந்தது. இது வாழ்கின்ற தமிழ். இது வாழும் தமிழ். ஒவ்வொரு சொல்லும் அப்படி உருவாகியிருக்கிறது.
எடுத்துக்காட்டாகச் சில சொற்களைச் சொல்கிறேன் பாருங்கள்.. 'பூனை' என்றொரு சொல் இருக்கிறது. பூனை நம் வீட்டில் வளர்க்கிற விலங்கு எல்லோருக்கும் பிடிக்கும். அது எப்படி பூனை என்றொரு சொல்லாகியிருக்க முடியும்? எண்ணிப் பாருங்கள்... அந்த விலங்கிற்கு எதற்குப் பூனையென்ற சொல் வரவேண்டும் ? அந்தச் சிற்றுயிர் நமக்குப் பிடித்தமானதாக இருக்கிறது அதற்கு வேறொரு சொல் வந்திருக்கலாமே... எப்படி அந்தப் பூனையென்ற சொல் இந்த மொழிக்குள் வந்தது ? இதை மலையாளத்தில் என்ன சொல்கிறார்கள் ? 'பூச்சை' என்று சொல்கிறார்கள். மலையாளம் தமிழிலிருந்து கிளைத்த மொழி. அங்கே எப்படிப் பூச்சை வந்தது இங்கே எப்படிப் பூனை வந்தது? என்ன நடந்தது ? இந்தச் சொல் எப்படி உருவானது என்பதற்குரிய விடையில் இருக்கிறது நீங்கள் காணவேண்டிய ஒரு விந்தை.
பூனையினுடைய இயல்பென்ன ? அது தன் உடலை மிகவும் தூய்மையாகப் பேணும். உமிழ்நீரைக்கொண்டு தன்நாவால் உடலைப் பூசித் தூய்மைப்படுத்திக் கொள்ளும். மிகவும் தூய்மையாக இருக்கும். எந்நேரம் பார்த்தாலும் இந்த உமிழ்நீரால் தன் உடலைப் பூசி பூசிக் கழுவிக்கொள்ளும். ஆக இந்தப் பூசும் இயல்புதான் பூனையினுடையது. இதில் பூசுதல் என்பது ஒரு வினைச்சொல். நமக்கு நான்குவகைச் சொற்கள் இருக்கின்றன. பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல்,இடைச்சொல் ஆகியவை அந்நான்கும். இதில் பெயர்ச்சொல்லெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; நமக்குரியது வினைச்சொல். எந்தவொரு வினை அல்லது தொழில் வினைப்பாடு - அதிலிருந்துதான் எல்லாச் சொற்களும் வருகின்றன.
இந்தப் பூனையானது பூசிக்கொண்டேயிருக்கிறது. எந்தவொரு வினைவேர்ச்சொல்லோடும் ஓர் 'ஐ' விகுதியைச் சேர்த்தால் அதற்குரிய வினைச்சொல் கிடைக்கும். இப்போது பூசிக்கொண்டேயிருக்கிறதா ? பூசு+ ஐ - பூசை, பூனையின் பெயர் பூசையென்று வந்தது இப்படித்தான். பூசையென்பதைக் கொஞ்சம் வல்லினமாகச் சொன்னால் பூச்சை. இதுதான் மலையாளத்திற்குப் போய்விட்டது. ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மலையாளத்திற்குச் சென்றுவிட்டதா ? அவர்கள் இன்னும் அதைப் பூச்சையென்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பூச்சை. நமக்கு அது பூசை. சரி பூசையென்று இருந்தது எப்படிப் பூனை என்றானது ? இங்குத்தான் மொழியியல்பு வருகிறது. மொழியில் வல்லினம் மெல்லினம் உண்டு. 'க்' என்பதற்கு 'ங்' - இவை இரண்டும் முறையே இன வல்லினமும், இன மெல்லினமும் ஆகும். அதாவது வல்லினம் வரக்கூடிய இடத்தில் அதற்குரிய இனமெல்லினமும், மெல்லினம் வரக்கூடிய இடத்தில் அதற்குரிய இனவல்லினமும் மாறிமாறி வரும். எடுத்துக்காட்டாக 'ம்' வரக்கூடிய இடத்தில் 'ப்' வரும் செம்புக்குடம் என்பது செப்புக்குடம் என்றாகும். கரும்புச்சாறு என்பது கருப்பஞ்சாறு என்றாகும். 'ன்' என்பதற்கு 'ற்' வரும் கன்று+ஆ - கற்றா என்று வரும். அதேபோல் ச்' என்பதற்கு 'ஞ்' இனமெல்லினம். இப்போது பூசை என்னுமிடத்தில் பூஞை என்று வரும். அடுத்துப் பூஞை என்பது பேச்சுத் தமிழில் பூனை என்றானது.
இந்தப் பேச்சுத்தமிழ் என்பது வேறொன்றுமில்லை. இலக்கணப்படி சொல்வதுதான். நீட்டுவோம், விரிப்போம், குறுக்குவோம், சுருக்குவோம், தொகுப்போம். இதுவும் இலக்கண இயல்புதான். பேச்சுத்தமிழ் என்பதை நீங்கள் ஒன்றும் இலக்கணமில்லாமல் பேசிக்கொண்டிருக்கவில்லை. இதுவும் இலக்கணத்தில் இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் விகாரங்கள் என்று பெயர். 'போய்விட்டான்' என்று சொல்கிறோம். இது எழுத்துத் தமிழ்.இதில் ஓர் எழுத்தைக் கழிக்கிறோம் அதுதான் 'போய்ட்டான்' என்ற பேச்சுத்தமிழ். 'வி' மட்டும் இல்லை. 'வி' ஏன் காணமல் போகிறது ? அதுதான் உடம்படுமெய்த் தன்மையுள்ள எழுத்து. அதற்கு ஏறத்தாழ உயிரோசை. சொல்லுக்கு நடுவில் ஓர் உயிரெழுத்து வராது, உயிரோசை வராது. அதனால்தான் 'போய்விட்டான்' என்ற எழுத்துத் தமிழைப் பேசும்போது தொகுக்கிறோம். விரைந்து சொல்கிறோம் 'போய்ட்டான்' என்றாகிறது. இப்படித்தான் பூசை என்பது பூஞையாகிப் பேச்சுத்தமிழில் இன்னும் எளிமையாகப் பூனையாகிவிட்டது. எவ்வாறு இந்தச்சொல் உருவாகிறது. பாருங்கள் ! ஒரு சொல்லானது என்ன தன்மையோடு எப்படி உருவாகி நம் மொழிக்குள் வருகிறதென்று.
இப்போது நான் சொன்னேன் பேச்சுத் தமிழெல்லாம் இலக்கணப்படிதான் இருக்கிறது என்று. ஏன்ங்க அப்படியா இருக்கிறது ? என்னவோ கண்டபடிதானே பேசுகிறோம், அதை எழுதினால் இலக்கணப்படி வராதே... எழுத்துத்தமிழ் வேறுதானே ? அப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்போம். பாருங்கள், பேச்சுத்தமிழில் நான் ஒரு சொற்றொடரைச் சொல்கிறேன் : "நான் சந்தைக்குப் போவன், கடை வீதியில் நடப்பன், ஒவ்வொரு கடையாக ஏறிப் பார்ப்பன், காய்கறி வாங்குவன், திரும்ப வீட்டுக்கு வருவன்" இப்படிச் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதிலுள்ள வினைச்சொற்களையெல்லாம் நான் எப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், "போவன், வருவன், வாங்குவன், ஏறியிறங்குவன், பார்ப்பன், திரும்புவன்" இப்படிச் சொல்கிறேன். இதையே நான் எழுத்துத்தமிழில் எழுதுகிறேன் என்று வையுங்கள் அதை எப்படி எழுதுவேன்? " போவேன், வருவேன், வாங்குவேன், திரும்புவேன்" இப்படி வேன் வேன் என்று எழுதி எழுத்துத் தமிழில் திருத்தமாக எழுதிவிட்டதாக நாம் நினைப்போம். ஆனால் 'ஏன்' என்பது எப்படி ஒரு வினைமுற்று விகுதியோ 'அன்' என்பதும் ஒரு வினைமுற்று விகுதி. "சந்தைக்குப் போவேன்" என்பது எப்படித் திருத்தமானதோ அதேபோல் "சந்தைக்குப் போவன்" என்று எழுதினாலும் அது திருத்தமான பிழையில்லாத் தமிழ். இலக்கண முறைப்படியான தமிழ். அப்படியென்றால் பேச்சுத்தமிழை இலக்கண முறைப்படிதான் பேசினோம். அந்தச் சொற்களெல்லாம் பிழையில்லாமல் திருத்தமே தேவையில்லாமல் இருக்கிறதே. அதைத்தான் மக்கள் பேசினர். எழுதுகிறபோது என்னவென்று எழுதிவிட்டோம். 'போவேன்', 'வருவேன்' என்று 'ஏன்' சேர்த்து எழுதிவிட்டோம். அந்தப் 'போவேன்', 'வருவேன்' என்பதுதான் சரியான தமிழென்றும் 'போவன்', 'வருவன்' என்பது சரியில்லாதது என்றும் நமக்குள் ஒரு எண்ணத்தை எழுதியவர்கள் உருவாக்கிவிட்டார்கள். அதுவொரு முறையாகிவிட்டது. அவ்வாறு எழுதியதை வைத்து இதுதான் சரியோ என நினைத்துக்கொண்டு நாம் இருக்கிறோம்.ஆனால் பேச்சுத்தமிழில் பாருங்கள் எல்லாம் மிகச்சரியாக வாழ்கிறது.
தமிழை ஒரு வினைச்சொல் மொழியென்று நான் சொல்வேன். இதில் ஓர் ஆங்கிலச்சொல் வருகிறதென்றால், அது பெயர்ச்சொல்லாக மட்டும்தான் வரும். வினைச்சொல்லாக வராது. ஒரு வினைச்சொல்லைத் தமிழில் கலக்கவே முடியாது. ஏனென்றால் இது வினைச்சொல் மொழி. நமக்குப் பூனை என்பது பூசு என்கிற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. ஆகவேதான் இங்கு ஒரு வினைச்சொல்லை ஆங்கிலத்தின் வழியே கொண்டு வந்து கலக்க முடியாது.
எடுத்துக்காட்டிற்குப் பாருங்கள்.. 'வொர்க் (work)' ஆங்கிலத்தில் இது ஓர் ஏவல் பொருளுடைய வினைச்சொல். ஆனால் வொர்க் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஏவலாகக் கருதமாட்டோம். வொர்க் பண்ணு என்று சொன்னால்தான் ஏற்றுக்கொள்வோம். வாஷ்(wash) என்பதும் ஏவல் வினைச்சொல்தான். ஆனால் அதை அப்படியே நாம் ஏற்கமாட்டோம். வாஷ் பண்ணு என்றால்தான் ஏற்போம். 'பண்ணு' என்ற வினைச்சொல் வேண்டும் நமக்கு. இல்லையென்றால் வாஷ் என்பது வெறும் பெயராகத்தான் நிற்க வேண்டும். சேவ் பண்ணு, குக் பண்ணு, க்ளைம் பண்ணு, வாக் பண்ணு, ரன் பண்ணு. இப்படிப் பண்ணு என்ற சொல் சேர்ந்தால்தான் அதை வினைச்சொல்லாக நாம் எடுத்துக் கொள்வோம். ஆகவே தமிழில் ஒரு பிறமொழிச்சொல் கலக்கிறதென்றால் அது பெயர்ச்சொல்லாக மட்டும்தான் இருக்கமுடியும். வினைச்சொல்லைக் கலக்கவே முடியாது. அப்படியென்றால் நாம் என்ன செய்யவேண்டும் ? பிறமொழிப் பெயர்ச் சொற்களைத்தான் தமிழாக்க வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
இன்றிலிருந்து ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்த தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியின்படி நமக்குப் பெயர்ச்சொற்கள் அரிதாகத்தான் உள்ளே வந்தன. 'ரேடியோ' என்ற அறிவியல் கருவி வருகிறது. உடனே அதை நாம் வானொலி என்று மொழிபெயர்த்து விடுகிறோம். தமிழ்ப்பெயர் வைத்துவிடுகிறோம். இருபதாண்டுகளுக்கு அதுதான் மக்களுக்கு இருந்த பொழுதுபோக்குப் பயன்பாட்டுக் கருவி. இடையில் இருபது முப்பது ஆண்டுகளில் தொழில்நுட்பப் பாய்ச்சல் வந்தது பாருங்கள்., ஆங்கிலத்தாலேயே தாங்கமுடியாத அளவிற்கு அவர்களிடத்தில் புதுப்புதுச் சொற்கள் உருவாகின. அவையெல்லாம் அப்படியே இங்கு வருகின்றன. இங்கு வந்தவுடன் நாம் அவற்றைத் தமிழாக்கிப் பயன்படுத்துகிற ஒரு பழக்கத்தையே விட்டு விட்டோம். ஒரு சொல்லைத் தமிழ்ச் சொல்லாகத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற ஓர் உணர்ச்சியை நாம் இழந்து விட்டோம். எது வந்தாலும் அப்படியே நம் மீது திணிப்பார்கள். இங்குள்ள ஊடகர்களும், நம் எழுத்தாளர்களும், நாம் அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் அந்தச் சொல் குறித்து ஏதொரு சிறிதான மாற்றுச் சிந்தனையும் இல்லாமல் அப்படியே மக்கள் மீது திணிப்பார்கள். அதாவது போவன், வருவன் என்று இலக்கணப்படி பேசிக்கொண்டிருந்த இந்த மக்களிடம். அவர்கள் அப்படித் திணிப்பதால் அதுதான் சரியான சொல் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் 'ரேடியோ' வந்தபோது வானொலி என்று சொல்லிவிட்டோம். 'போன்' வந்தபோது தொலைபேசி என்று சொல்லிவிட்டோம். டிவி வந்தபோது தொலைக்காட்சி என்று சொல்லிவிட்டோம். இப்படி உடனே உடனே தமிழாக்கம் செய்து பயன்படுத்தினோம். அப்புறம் இந்தத் தொண்ணூறுகளுக்குப் பிறகு பலப்பல சொற்கள் உள்ளே வந்தன. அவற்றை எல்லாம் அப்படியே பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
ஆங்கிலத்தில் அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வான் ஆங்கிலத்தில் ஒரு பெயர்ச்சொல் உருவாக்குவதற்கு எந்த வரையறையும் இல்லை. இலக்கணமும் கிடையாது. Acquired Immune Deficiency Syndrome என்பதிலிருந்து முதல் எழுத்துகளையெல்லாம் உருவி AIDS என்றொரு சொல்லை உருவாக்கிக் கொள்வான். நாம் அப்படி உருவாக்க முடியுமா? நமக்குப் பகுதி இருக்கிறது; விகுதி இருக்கிறது; சந்தி இருக்கிறது; சாரியை இருக்கிறது. நாம் ஒரு தொழிற்பெயரோடு விகுதி சேர்த்துத்தான் ஏதாவதொரு பெயர்ச்சொல்லை உருவாக்க முடியும். பூனை என்ற சொல் அப்படித்தான் வந்தது. இதுதான் நம்முடைய மரபு.
நீங்கள் தமிழினுடைய பெயர்ச்சொல் அழகைப் பாருங்கள். எண்ணுப் பெயர்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. எண்முறைகளானது எட்டோடு முடிகின்றன என்றொரு கருத்துள்ளது. அடுத்து தொண்டு என்றொரு சொல் உள்ளது. அது வழக்கொழிந்து போய்விட்டது அதற்குப் பதிலாக வந்ததுதான் ஒன்பது. எட்டு வரைக்கும் சொற்கள் எல்லாம் தானாக உள்ளன. ஒன்று, இரண்டு, மூன்று,...... எட்டு வரை புரிகிறது. இந்த ஒன்பது என்று வரும்போது அதில் பத்து வந்துவிடுகிறது. ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, அப்படியே இருபதுவரை வருகிறது. அதே முறை எண்பது வரை தொடர்கிறது. அடுத்ததாய்த் தொண்ணூறு வருகிறது இந்தப் பத்துகளிலேயே நூறு வந்துவிடுகிறது. அது ஏன் வருகிறது என்று அடுத்துச் சொல்கிறேன். தொண்ணூறு, நூறு, இருநூறு என்று எண்ணூறு வரை செல்கிறது அடுத்ததாய்த் தொள்ளாயிரம் வருகிறது. இந்த நூறுகளிலேயே ஆயிரம் வந்துவிடுகிறது. அதாவது முதலாயிரம் வருவதற்கு முன்பு இங்குத் தொள்ளாயிரம் வருகிறது. இதற்கு என்ன காரணமென்றால், எட்டுவரைக்கும்தான் நம்முடைய எண்முறை. அது திண்ணமானது. எல்லாம் எட்டுக்குள்தான். இந்த எட்டு அவ்வளவு ஒரு தீர்மானமான எண். அடுத்து ஒன்பது வருகிறது. அது ஒன்றாம் பத்தினுடைய ஓரிடம். இருபது இரண்டு பத்தில்லையா. அதுபோல் ஒன்றாம் பத்தினுடைய ஒரு சொல்தான் ஒன்பது. அதாவது ஒன்றாம் பத்து அடுத்து வருகிறது என்பதை அது அறிவிக்கிறது. அந்த எண்முறையே மாறப்போகிறது என்பதை அறிவிக்கிறது. இப்படி ஒன்றாம் பத்தை அறிவிக்கும் எண் என்பதால் அது ஒன்பது.
சரி, ஒன்றாம் பத்தை அறிவிப்பதால் ஒன்பது. அது என்ன தொண்ணூறு? நீங்கள் சட்டை அணிந்திருக்கிறீர்கள். அது பிடித்தமாக இல்லாமல் உங்கள் உடலளவைவிடப் பெரிதாகத் தளர்வாக உள்ளது. அதை எப்படிச் சொல்வோம் ? தொள தொளவென்று இருப்பதாகச் சொல்வோம். சட்டை தொள தொள என்று இருக்கிறது. அது என்ன தொள தொள ? பாருங்கள். எந்தவொரு சொல்லையும் வினைச் சொல்லிலிருந்துதான் நாம் எடுத்துக்கொள்வோம். தொண்டைக் கட்டிக்கொண்டது, நாம் என்ன சொல்வோம்? தொண்டைக் கரகரங்கிறது என்று சொல்வோம். ஏன் தொண்டை கரகரங்கிறது. ஏனென்றால் 'கரைதல்' என்ற வினைச்சொல். காக்கை கரைகிறதல்லவா... உங்கள் குரல் கட்டிக் கொண்டதால் காக்கை கரைதலைப்போல் இருக்கிறது. அதனால்தான் கரகரங்கிறது என்கிறோம்.வேறு எந்த மாதிரியும் நாம் சொல்வதில்லையே. தொண்டை முறுமுறுங்கிறது என்றோ அல்லது வேறு எந்த மாதிரியாவது உள்ளதென்றோ நாம் சொல்வதில்லையல்லவா ? தன்னியல்பாக, அனிச்சையாகச் சொல்கிறோம். உங்கள் உணர்வுப்புலன் தானாகக் 'கரகரங்கிறது' என்று சொல்கிறது. ஒரு குழந்தையைக் கூப்பிட்டு எண்ணெய் எப்படி இருக்கிறது என்று கேட்டீர்களென்றால் வழுக்குகிறது என்று சொல்லும். வழுக்குதல், வழுவுதல் அதுதான் வினை. வழுக்குகிறது, வழவழங்கிறது அப்படித்தான் குழந்தை சொல்லும். தானாக எங்கிருந்தோ ஒன்று இழுத்துக்கொண்டு வரும். அப்படித் தொண்டை கரகரங்கிறது என்பது காக்கை கரைகிறது என்ற வினையிலிருந்து வரக்கூடியது. அதுவொரு கரையும் வினையிலிருந்து உருவான சொல்.
இப்போது தொண்ணூறுக்கு வருவோம். சட்டை தொளதொளவென்று இருப்பதாகச் சொன்னோம் இல்லையா ? அந்தத் தொளதொளவென்பதன் வினைச்சொல் 'தொள்குதல்/தொள்ளுதல்'. தொள்குதல் என்றால் அடுத்து நெகிழ்ந்து தருதல். உங்கள் சட்டை உங்களுக்கு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்ந்து கொடுத்துவிட்டது. அதைத்தான் நாம் தொளதொளவென்று இருப்பதாகச் சொல்கிறோம். அப்படித்தான் எண்முறையில் பத்துகள் அடுத்து நூறை நோக்கித் தொள்கும் இடமானது தொள்நூறு. அதுதான் தொண்ணூறு. எப்படி மொழியானது இன்னொரு பெயரை எடுத்துக்கொள்கிறது பாருங்கள். இந்த மொழி எப்படி உருவாக்கிக் கொடுக்கிறதென்று பாருங்கள். ஏன் தொண்ணூறு வருகிறதென்றால், நூறை நோக்கி இங்கு எண்முறை தொள்கிறது. அடுத்ததாய்த் தொள்ளாயிரம்., ஆயிரத்தை நோக்கி இந்த எண்முறைத் தொள்கிறது. இப்படித்தான் இந்த எண்ணுப் பெயர்களெல்லாம் உருவாகின்றன. பாருங்கள் நம்மொழி எத்தகைய பொருளோடு அந்தச் சொற்களை உருவாக்கி உங்கள் கையில் கொடுத்திருக்கிறது. ஏதோ பொருளில்லாமல் ஏனோதானோவென்று நாம் எதையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு உட்பொருள் இருக்கிறது. அவ்வளவு சொற்கள் வலிமையோடு இருக்கின்றன. அவ்வளவு ஆழ்ந்து இருக்கின்றன. அதனால்தான் இந்த மொழி வாழ்கிறது. சும்மா வாழ்ந்துவிடவில்லை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகள்.
இன்று பாருங்கள்... இந்த மொழிக்கு எதிராக என்னென்ன இருக்கின்றன என்று சொல்கிறேன். இந்த மொழியில் பிறமொழிச் சொற்கள் வந்து கலக்கின்றன. வடசொல் வருகிறது. ஆங்கிலச்சொற்கள் இன்று மிகுதியாக வந்து கலக்கின்றன. அதற்கு நாம் ஒரு முடிவு கட்டுவோம். அது நடக்கும். காலமெல்லாம் இப்படியே போய்விடாது. சரி.. வடசொற்கள் வந்து கலக்கின்றன. அவை என்னென்ன என்று பார்த்தால் உங்களுக்குத் தெரியும். விசயம், அக்கிரமம், அநியாயம், சக்தி - இவை போன்றவை வடசொற்கள். இப்படி எத்தனை வடசொற்கள் நம்மிடம் இருக்கின்றன என்று பார்த்தால், இம்மாதிரியான சொற்கள் என்று ஓர் ஆயிரத்து இருநூறு சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. தமிழ்நாட்டு மக்கள்தொகை எத்தனை ? எட்டுக்கோடி. ஆயிரத்து இருநூறு வடசொற்கள் தமிழில் கலந்துள்ளன. அவற்றைக் களைந்துவிடும் நோக்கோடு நிறையவே தமிழ்ப்படுத்திவிட்டோம். எல்லா வடசொற்களுக்கும் நம்மிடம் தமிழாக்கம் உண்டு. பிரச்சாரம் என்பதைப் பரப்புரை ஆக்கிவிட்டோம், அபேட்சகர் என்பதை வேட்பாளர் ஆக்கிவிட்டோம். இப்படி எல்லாச் சொற்களையும் தமிழ்ப்படுத்திவிட்டோம். ஆயிரத்து இருநூறு வடசொற்களையும் நீக்கிவிட்டோம். ஆனால் இன்னும் ஏழு கோடி வடசொற்களை நம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஏழு கோடி வடசொற்கள் இருக்கின்றன தமிழ்நாட்டிற்குள். தமிழினுடைய சொல்வளமானது, தமிழ் - தமிழ் அகரமுதலியில் அறுபத்தாறாயிரம் சொற்கள் இருக்கின்றன. வையாபுரிப் பிள்ளை தொகுத்த அகரமுதலியில் ஒன்றேகால் இலட்சம் சொற்கள் இருக்கின்றன. எப்படி நீட்டி முழக்கிப் பார்த்தாலும், மூன்றிலிருந்து ஐந்து இலட்சம் சொற்கள் இருக்கும் தமிழுக்குள். ஒரு மொழிக்கு இது மிகப்பெரும் வங்கி. ஆனால் உங்கள் முன்னாடி ஆயிரத்து இருநூறு வடசொற்கள் இருக்கின்றன அவற்றையெல்லாம் நாம் தமிழ்ப்படுத்திப் பயன்படுத்திவிட்டோம். எட்டுக்கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் ஏழுகோடி வடசொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் அவை எல்லாமே உங்களுடைய பெயர்கள். இப்படி ஏழு கோடி வடசொற்கள் பரவியிருக்கக்கூடிய இடத்தில்தான் இந்தத் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. என் பெயர் ஒரு வடசொல். நாம் வைத்திருக்கிற பெயரெல்லாம் வடசொல். இனியும் நம் பெயரன் பெயர்த்திக்குப் வைக்கப் பார்ப்பதெல்லாம் வடசொல். ஏதோ ஒன்றை வைத்துக் கொள்கிறார்கள். என்ன ஐயா பொருள் என்றால் தெரியவில்லை. உன் பெயருக்கு என்ன பொருள்? யாருக்குத் தெரியும் என்கிறார்கள். சுசீலா என்று பெயர் வைத்திருக்கிறோம், என்ன பொருள்? லதா என்று பெயர் வைத்திருக்கிறோம், என்ன பொருள்? தெரியவில்லை.
சொல் என்றால் பொருள் இருக்க வேண்டும். இல்லாமல் எப்படிச் சொல்லாகும் ? சொல் என்றாலே பொருள்தான். 'பிம்பிளிக்கி பிளாப்பி' என்றொரு சொல் வந்துவிடமுடியுமா ? அது வராது. ஏனென்றால் அதற்குப் பொருள் கிடையாது. அது தமிழ் எழுத்தில்தான் எழுதப்படுகிறது. சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. சொல் மாதிரியேதான் தெரிகிறது. ஆனால் அதைச் சொல் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அது சொல் கிடையாது. சொல் என்றால் பொருள் இருக்க வேண்டும். அப்படியென்றால் நீங்கள் ஒரு பெயர் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள், அதற்குரிய பொருளே தெரியாமல் இருக்கிறீர்கள். அந்தப் பெயரானது ஏழு கோடிக்கும் மேல் உள்ளது தொகையில். இந்த ஏழு கோடியும் பிறமொழிச் சொற்களாக இருக்கின்றன. இதற்கு மதமெல்லாம் ஒரு காரணம் அந்தப் பகுதிக்கு நாம் செல்ல வேண்டா. ஆனால் தமிழுக்கெதிரான தமிழல்லாத பெயர்ச்சொற்கள் அவை. இவற்றை என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிலைமை இப்படியிருக்க, தமிழில் பெயர் வையுங்கள் என்று சொல்வது எப்படித் தவறாகும் ? நாம் ஏழு கோடிப்பேரும் வடசொல்லில் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறோமே.
அப்போது ஏதோ அறியாமையில் வைத்துவிட்டோம். வடசொல்,தமிழ்ச்சொல் என்று பிரித்தறிவதற்கான களமே கிடையாது. தமிழ் படிப்பதே அரிது. கல்வியே ஒருவர்க்கு எட்டாக்கனி. அந்தக் காலகட்டத்தில் என்னவோ ஒரு பெயரை வைத்துக்கொண்டோம். இப்போது எப்படி வைக்கமுடியும்? தொழில்நுட்பம் என்கிறீர்கள், வளர்ச்சி என்கிறீர்கள், அது இது என்கிறீர்கள் அப்படியே வைத்துக்கொண்டிருக்க முடியுமா? ஆகவே இதைத் திருத்த வேண்டும். சரிசெய்ய வேண்டும்.
சங்ககாலத்தில் எந்தப் புலவர்க்காவது வடசொற்பெயர் இருக்கிறதா ? சங்ககால மன்னர் எவர்க்காவது வடசொற்பெயர் இருக்கிறதா ? இல்லை. இடைக்காலத்தில்தான் இவை எல்லாம் வருகின்றன. பிற்பாடு நாமெல்லாம் அதை ஏற்றுக்கொண்டோம். ஏன் நமக்குத் தமிழ்ச்சொற்கள் இல்லாமல் வடசொற்பெயர்கள் வந்ததென்று பார்த்தோமேயானால், தமிழினுடைய பெயர்கள் இயல்பாக இருக்கும். இயற்கை விளி. கறுப்பாக இருந்தால் கறுப்பன்தான். மன்னனுக்குக் கூன்பாண்டியன் என்று பெயர் இருக்கும். மன்னன் கால் கரிந்து போய்விட்டது, கரிகாலன் என்று பெயர் வரும். என்ன உண்டோ அதுதான். இயற்கையென்றால் இயற்கைதான். கூடுதலோ, குறைத்தோ இரக்கமே காட்டாது இந்தமொழி. ஆனால் வடசொல்லானது புகழும். அப்படியே இந்திரனே சந்திரனே இராசாவே என்று வடசொல்லினுடைய எல்லாப் பெயர்களும் புகழ்ந்து புகழ்ந்து இருக்கும். நாம் புகழ்ச்சியை விரும்பினோம். வடசொற்பெயர்களை வைத்துக் கொண்டோம். இதுதான் உண்மை.
இப்படியாகத் தமிழில் வடசொற்கள் கலந்திருக்கின்றன, அதுவொரு பக்கம். புதிதுபுதிதான தொழில்நுட்பத்தால் ஆங்கிலச் சொற்கள் கலக்கின்றன, அதுவொரு பக்கம். இவற்றிற்கிடையில் இந்த மொழியானது வாழ்ந்து வருகிறதென்றால் எவ்வளவு கொடுங்காலத்தில் வாழ்ந்து வருகிறது ? இதற்கு என்ன பற்றுக்கோல்? இதனுடைய மொழி மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? நாம் படிப்பவை எல்லாமே ஆங்கில வழியில் படித்துக் கொண்டிருக்கிறோம். எதுவுமே தமிழில் இல்லை. ஒரு மருத்துவப் புத்தகம் தமிழில் இல்லை. கணக்குப் புத்தகங்களைப் பள்ளியில் படித்திருப்பீர்கள். ஏதாவதொரு கணக்கியல் நூல் தமிழில் உண்டா ? எல்லாம் கதை, கவிதை, கட்டுரை என புனைவு சார்ந்தவையாகத்தான் இருக்கும். அறிவுத்துறை சார்ந்து விரிவாய் ஆழமாய் எழுதப்பட்ட ஒரு நூலையேனும் தமிழில் பார்க்கிறோமா ? கணினியின் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்து ஒரு தமிழ்நூல் இருக்கிறதா? இன்று என்னென்னவோ நடந்து கொண்டிருக்கின்றன. எப்படி விண்கலம் (இராக்கெட்) செய்கிறார்கள் என்பதை அறிய ஒரு தமிழ்நூல் இருக்கிறதா ? எதுவுமே இல்லை.
இன்னும் எத்தனை நாள்களுக்குத்தாம் நாம் இப்படியே இருக்கப் போகிறோம் ? இதுநாள்வரை நாம் ஏனோதானோவென்று பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்துவிட்டோம். இனியும் அப்படியே இருக்க வேண்டுமா? அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் நமக்கே வரவேண்டுமில்லையா. இந்த உணர்ச்சி மக்களுக்குத் தானாக வரவேண்டும். இவை எல்லாம் உங்களுடையவை. வேறு யாருடையதுமில்லை. நீங்கள்தான் காக்க வேண்டும். 'பார்க்காத பயிர் பாழ்' - பார்க்காத பயிர் கெடும். தமிழை நீங்கள்தான் வளர்க்க வேண்டும். நீங்கள்தான் பெயரிட்டு வளர்க்க வேண்டும். நீங்கள்தான் ஒவ்வொரு சொல்சொல்லாகத் தேடிச் சென்று பயன்படுத்த வேண்டும். எப்படி நம் தாத்தா, பாட்டி பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தாமல் தமிழை இயற்கையாக இயல்பாக அழகாகப் பயன்படுத்தினார்களோ அப்படிப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வட்டார வழக்கும் நம்முடைய செல்வம் அதில் ஆழ்ந்த அருஞ்சொற்கள் பொதிந்து கிடக்கின்றன. மக்கள் அப்படிப் பேசினார்கள். நாம் அவற்றால் வளர்ந்தோம். நமக்குப் பிறமொழியென்பது ஒரு தனிக்கல்வி, அவ்வளவுதான். நமக்குப் பிறமொழியறிவு என்பது ஒரு தனியறிவு, அவ்வளவுதான். எத்தனையோ அறிவுகளில் அதுவும் ஒன்று. நம்முடைய மொழிமனம் தமிழால் ஆனது. நாம் தமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்றே கூறுவோம் ! நன்றி வணக்கம் !
OO
உ. மொழியும் கவிதையும்
சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் 242ஆவது திங்கட்கூடுகை (மாதாந்திரச் சந்திப்பு) நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் ‘மொழியும் கவிதையும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
***
‘மொழியும் கவிதையும்’ என்ற தலைப்பிலான கவிஞரின் உரை:-
கவிதைக்கும் மொழிக்கும் இடையில் முதல் தோற்றுவாய் ஒன்று உள்ளது அதுதான் சொல். எல்லோரும் பேசுகிறோம்,எழுதுகிறோம், சொல்கிறோம். ஆனால் அதில் ஒரு சிலருடைய கருத்துகள் மட்டும் அனைவரும் ஏற்கக்கூடிய வகையில், பாராட்டிப் புகழத்தக்க வகையில் இருக்கும். அப்படி எல்லோரையும் ஓர் அசைவுக்கு உள்ளாக்கக்கூடிய சொற்றொடரைக்கொண்ட கருத்தே கவிதையின் முதல் தோற்றம். அதாவது மொழியினுடைய உயர்ந்த வடிவம் என்று இதைச் சொல்லலாம்.
ஒரு பாம்பைக் கண்டால் பயத்தில் கத்துகிறோம், யாரையாவது சினத்தில் திட்டுகிறோம். அன்பில் ஒருவரைக் கொஞ்சுகிறோம். வெறுமனே உணர்ச்சியே இல்லாமல் ஏதோ ஒரு செய்தியைக் கூறுகிறோம். இவை அனைத்துமே சொல்லும் முறைகள்தாம். ஆனால் கவிதை என்பது எந்த இடத்தில் வேறுபடுகிறது என்றால் இப்படிச் சொல்லப்படும் முறைகளிலேயே உயர்ந்த வடிவத்தில் கூறும்போதுதான்.
ஒரு பாமரரும் கவிதைத்தனமான ஒரு சொற்றொடரைக் கூறமுடியும்.
மிகவும் கற்றறிந்தவரும் அழகிய கருத்தைக் கூறமுடியும். ஒரு மழலையிடமிருந்தும் வியக்கத்தக்க கேள்வி வந்துவிடும். இப்படி எல்லோருமே கூறும் முறையில் ஓர் அடர்த்தியான, செம்மையான, அருமையான வடிவத்திற்கு வருவார்கள். அந்த இடம்தான் கவிதை பிறக்குமிடம். நுண்மைப்பட்டு நுண்மைப்பட்டுக் கூறும் முறை ஒரு செறிவு பெற்று வந்துவிட்டால் அது கவிதையாகிவிடும்.
ஒரு பொருளை எல்லோரும் பார்க்கிறார்கள். ஒரு கவிஞரும் பார்க்கிறார். அந்தக் கவிஞரின் பார்வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு இருக்கும். அப்பொருளைப் பற்றி மற்றவர்கள் கூறும் கருத்திலிருந்து அந்தக் கவிஞர் கூறும் கருத்து மிகச் சிறந்ததாகவும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் இருக்கும். அந்தக் கருத்தை அதைவிடச் சிறப்பாக இன்னொருவர் சொல்லிவிடமுடியாது என்ற வகையில் அமைந்திருக்கும். அந்த இடத்திற்கு வருவதுதான் கவிதையின் முதல் இலக்கு.
எடுத்துக்காட்டாக வீணாப்போயிடுவேனோ என்ற பேச்சு வழக்கு வார்த்தைக்கு பாரதியார்
'தேடிச்சோறு நிதம் தின்று' என்ற பாடலின்மூலம் ஓர் உயர்வடிவம் கொடுக்கிறார். அந்த உயர்ந்த வடிவத்திற்கு வருவதுதான் கவிதை.
கவிஞராகும் ஆசை எல்லோரிடமும் இருக்கும் ஆனால் ஏன் இவ்வளவு மக்கள் திரளில் சில ஆயிரம்பேர் மட்டும் கவிஞராகிராகிறார்கள் என்றால் அவர்கள் மட்டுமே தொடர்ச்சியாக முயற்சி செய்கிறார்கள். கவிதை என்பது முயற்சி, பயிற்சி, கற்றல் இவற்றோடு தொடர்புடையதாகிறது.
கவிதைக்கான கருவியாக மொழி உள்ளது. அது நம்மைப் பொறுத்தவரை நம்முடைய தாய்மொழி. மற்ற தேசத்தவர்க்கு அவர்களுடைய மொழி. ஒருவர் தம் மொழியை அறிந்து அறிந்து பெற்ற நுண்மையிலிருந்து கவிதையை எழுதுகிறார். இப்படி கவிதை என்பது மொழியறிதலில் வந்து நிற்கிறது.
மிகச்சிறந்த கவிதை ஒன்றை எழுத வேண்டுமெனில் என்ன செய்வது? மொழியை நன்கு பழகி, அதை எப்படி வேண்டுமானாலும் செலுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டும்.
நீங்கள் ஒன்றைப் பார்க்கிறீர்கள் அதைப் பார்த்தவுடன் உங்களுக்குள் ஒரு கருத்து தோன்றும். அது எப்படிச் செம்மையாக, அருமையாக, இன்னொருவரோடு ஒப்பிட்டால் உங்களுடையது சிறப்பாக இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்படி நீங்கள் சொல்லிவிட்டால், அந்தக் கலை உங்களுக்குக் கைவந்து விட்டால் - நீங்கள் கவிஞராவதை யாரும் தடுக்க முடியாது.
எல்லாவற்றையும் உருவாக்க ஒரு கச்சாப் பொருள் தேவைப்படும். கவிதைக்குக் கச்சாப்பொருள் சொற்கள். ஒரு பொருளுக்குரிய பல சொற்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சொல்லும் முறையில் பலப்பல வகைகள் தெரியவேண்டும். சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டிற்குத் ‘தண்டனை கொடுத்தார்’ என்ற எல்லோரும் பயன்படுத்தும் எளிய வார்த்தைக்கு
‘ஒறுத்தார்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும்போது நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம்.
ஒரு கவிஞனுக்கு ஒரு புதிய சொல்லைப் பார்க்கும்போது ஒரு புதிய பூவைப் பார்ப்பது போன்ற சிலிர்ப்பு ஏற்பட்டுவிடும். அதேபோல் நாம் ஒரு புதிய சொல்லை உருவாக்கும்போதும் அந்த உணர்வு தோன்றும். அந்தப் படைப்பின்பத்திற்கு எதுவும் நிகராகாது.
கவிதை என்பது கற்றல், கவிதை என்பது பயிற்சி, கவிதை என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சி, கவிதை என்பது மனம் நுண்மைப்படுவது, கவிதை என்பது கல்வி - இவை எல்லாவற்றோடும் தொடர்புடையது கவிதை. இவை எவற்றிலிருந்தும் கவிதையைப் பிரித்துப் பார்க்க முடியாது.
சரி, கவிஞராவதால் என்ன பயனென்றால் உங்களைவிட உணர்வுகளால் நுண்மையடைந்த இன்னொரு மனிதரை நீங்கள் பார்க்க முடியாது. அதுதான் கவிஞர்களின் சிறப்பு.
இந்த மொழி, இந்தக் கவிதை ஆகிய இரண்டின் இடத்தையும் அடைவதற்கு நாம் எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
தொடக்கத்திலேயே எல்லாருக்கும் சிறப்பாகக் கவிதை எழுத வந்துவிடுமா என்றால் ஒரு சிலருக்கு வரலாம். ஆனால் தொடர்ச்சியாக வருமென்று சொல்லமுடியாது. நமக்கு முன்பே பல்லாயிரக்கணக்கான புலவர்கள் பல நூல்களைப் படைத்துள்ளனர். அவற்றையெல்லாம் நாம் கற்கவேண்டும். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் எப்படித் தொடங்குகிறார்கள், எப்படி முடிக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். அந்த நூல்களைப் படித்து முடிக்கையில் நமக்குள் ஏற்படும் விளைவு யாது... இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
நீங்கள் கவிதைகளைப் படிக்கிறீர்கள், கவிதைகளோடு வாழ்கிறீர்கள் என்னும்போது உங்களுக்கே நீங்கள் நன்மை செய்து கொள்கிறீர்கள். உங்களுடைய மனத்தை பண்படுத்தக்கூடிய கருவி கவிதையைத் தவிர வேறொன்றுமில்லை. மொழியும் கவிதையும் நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை.
எப்பொழுதும் கவிதை எழுதுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். போலச் செய்வது, இன்னொருவரைப் பார்த்துச் செய்வது, எங்கோ நடந்த நிகழ்வுகளுக்கு நாம் எதிர்வினையாற்றுவது... இப்படியெல்லாம் இல்லாமல் உங்களை நீங்கள் உள்ளாராய்ந்து கொண்டிருக்க வேண்டும். நம்முடைய அந்தரங்கத்தின் ஒரு துளியேனும் நம்முடைய கவிதையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லோரும்
உங்களைக் கவனிப்பார்கள். உங்களது சொந்த வாழ்வின் திளைப்பில் ஏதோவொரு திவலையாவது உங்கள் கவிதையில் இருக்க வேண்டும்.
நீங்கள் யாரென்று காட்டக்கூடிய அடையாளம் அதுதான். அது வெளிப்பட வெளிப்பட அந்தக் கவிஞன் புகழ்பெற்றுக் கொண்டே போவான். தன்னை வெளிப்படுத்தாத எந்தக் கவிஞனும் புகழ்பெற முடியாது. நீங்கள் நினைப்பது என்ன? இதில் புதிதாக நீங்கள் கூற வருவது என்ன? இதைத்தான் மக்கள் கேட்பார்கள். அதுதான் கவிதையில் ஈர்க்கக்கூடிய இடம். அதை நாம் சொல்ல வேண்டும். நம்முடைய உணர்வுகளைச் சொல்ல வேண்டும்.
எப்பொழுதுமே சொல்லும் முறையில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். பத்து வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை நான்கு வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படிச் சுருங்கச் சொல்லும்போது நம் மொழியில் ஓர் அடர்த்தி கூடிக்கொண்டே போகும். அப்பொழுது நமது கவிதையும் தரமானதாக இருக்கும்.
இந்தச் சுருங்கச் சொல்லும் கலையை நாம் எவ்வாறு கற்றுக் கொள்வதென்றால் பழைய இலக்கியங்களைப் படிக்க வேண்டும். அதிலுள்ள சொற்களையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் சொற்களுக்கு பொருளறிய ஓர் அகராதி எப்பொழுதும் நம் கையில் இருக்க வேண்டும். அதை நாள்தோறும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் புரட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தால் சொற்கள் உங்கள் கைவசமாகும். இப்பொழுது உங்கள் கையில் மொழியென்னும் மிகப்பெரிய ஆயுதமும், அதைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய போர்முறையும் உள்ளன. இதை வைத்து நீங்கள் எதை வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். வாழ்க்கையில் நீங்கள் எந்தச் சூழலில் இருந்தாலும், கவிதை உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பண்படுத்த உதவும்.
*
சில கேள்விகளும்,கவிஞரின் பதில்களும்:-
கேள்வி:
மக்களிடம் புழக்கத்திலிருக்கும் சில வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போது கவிதை மனதுக்கு நெருக்கமாக இருப்பதாகச் சிலர் கூறுகிறார்களே (எடுத்துக்காட்டாக பஸ் ஸ்டாண்ட், டீ கிளாஸ்) அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்:
மக்களிடம் புழக்கத்திலிருக்கும் மொழியைப் பயன்படுத்தி ஒரு கவிதை எழுதலாம் அது தவறில்லை. அது கவிதையா என்பதையும், அதன் நீண்ட ஆயுள் என்னவென்பதையும் நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.
காலப்போக்கில் சில நெறிமுறைகளுக்கு நீங்கள் வரவேண்டும். அது அப்படித்தான் ஆகும். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.
கேள்வி:
ஒரு கவிதையில் எதையெல்லாம் செய்யக்கூடாது, இவையெல்லாம் இந்தக் கவிதையில் இருக்கக்கூடாது என்பதைப் பற்றி கூறுங்கள்.
பதில்:
ஓர் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகக் கவிதை எழுதக்கூடாது.
எப்பொழுதுமே நல்லுணர்வுகளைத் தூண்டுகின்ற கவிதைகளை எழுத வேண்டும்.
தேவையில்லாமல் நீட்டி எழுதக்கூடாது முடிந்தவரையில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.
தொடக்கத்தில் பொதுவான மானிட விழுமியங்களுக்கு எதிராக எழுதக்கூடாது.
நாம் எழுதக்கூடிய கவிதை என்பது இன்னும் ஆயிரமாண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய வகையில் உலகப் பொதுவான உயர்ந்த கருத்துகளைச் சொல்ல வேண்டும்.
கேள்வி:
வட்டார வழக்குகளைப் பயன்படுத்திக் கவிதை எழுதலாமா?
பதில்:
தாராளமாக எழுதலாம். அதுவொரு பேச்சு வழக்கு மொழி. அதனைப் பதிவு செய்கின்ற கவிதையாக அது இருக்கும். அதில் சிறப்பான கவிதைகள் வந்திருக்கின்றன. உள்ளத்து அசைவுகளைத் தோற்றுவிக்கக்கூடிய ஆற்றல் அந்தக் கவிதைக்கு உண்டு. வட்டார வழக்கைப் பயன்படுத்தி கவிதை மட்டுமல்லாமல் கதை உரைநடை போன்றவற்றையும் எழுத வேண்டும்.
கேள்வி:
சமகாலக் கவிதைகளில் நிறைய மொழிக்கலப்பு செய்கிறார்களே, அதைப் பற்றிய உங்கள் கருத்து?
பதில்:
மொழிக்கலப்பு என்பது உங்களுடைய கொள்கை சார்ந்த முடிவு. ஒரு மொழியில் இன்னொரு மொழியைக் கலக்கலாமா என்றால் கூடாது என்பது என்னுடைய கருத்து. கவிஞரென்பவர் மொழியின் முதல் குடிமகன். அவருக்கு பிறமொழிச் சொற்களுக்குத் தகுந்த தம்முடைய மொழிச் சொற்களை உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கேள்வி:
பழங்காலச் செய்யுள்களைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளதே அதை அணுகுவது எப்படி?
பதில்:
பழங்காலச் செய்யுள்களிலும் எளிமையாக உள்ளவை உண்டு. திருக்குறள் ஔவையார் பாடல்கள் போன்றவற்றிலிருந்து தொடங்கலாம். நிரம்பவே பின்னே போக வேண்டாம். வள்ளலார், பாரதியார் போன்றவர்களின் செய்யுள்களைப் படிக்கலாம். அவையெல்லாம் எளிதாக அணுகக்கூடியவை. கவிமணியின் மலரும் மாலையும், பெ.சுந்தரனாரின் மனோன்மணீயம் போன்ற நூல்களைப் படிக்கலாம். இப்படிப் படிப்படியாக படித்துத் தேர்ந்து பின்னர்ச் சங்கச் செய்யுள்களுக்குப் போகலாம். அப்போது அவை எளிதாகத் தோன்றும்.
கேள்வி:
படைப்பாளிகள் புதிதாக சொற்களை உருவாக்கலாமா?
பதில்:
உருவாக்கலாம் அதற்குத் தொகை, தொடர் குறித்து நாம் படிக்க வேண்டும். வினைத்தொகை, தொழிற்பெயர் போன்ற இலக்கண வரைவுகளை நாம் அறிந்து வைத்திருந்தாலே நூற்றுக்கணக்கான சொற்களை உருவாக்க முடியும்.
கேள்வி:
அழகியலா? அல்லது உள்ளீடா? எதைக் கொண்டு ஒரு நல்ல கவிதையைத் தீர்மானிக்க வேண்டும். அதைப் பற்றி உங்களுடைய சொந்தக் கவிதை ஒன்றைக் கூறி விளக்கவும்.
பதில்:
ஒரு நல்ல கவிதை என்பது படிப்பவரை அசைத்துப் பார்க்க வேண்டும். அவரிடத்தில் ஒரு வியப்பை அல்லது ஓர் உணர்ச்சித் திகைப்பை ஏற்படுத்த வேண்டும். கவிதையினுடைய அழகியல் என்பது சொல்லும் முறை படிப்பவருடைய மனநிலை இவையெல்லாம் கலந்த ஒரு விளைவாகத்தான் அதை எடுத்துக் கொள்ளவேண்டும். அது ஒவ்வொருவரைப் பொறுத்தும் மாறுபடும்.
ஒரு நல்ல கவிதை என்பது படிப்பவரைத் திகைக்க வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது உணர்ச்சித் திகைப்பாக, கருத்துத் திகைப்பாக அல்லது அறிவுத் திகைப்பாக இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றோடு தொடர்புடையதுதான் நல்ல கவிதை.
எ:கா
" கொக்கின் கூரலகு
கொத்தித் தூக்கும்போதுதான்
வாழ்ந்த பெருங்குளத்தை
முழுதாய்ப் பார்க்க
வாய்க்கிறது மீனுக்கு"
கேள்வி:
நவீனக் கவிதைகளில் பொருள் புரிவதில்லையே என்று அதை எழுதியவர்களிடம் கேட்கும்போது நீங்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்களே. இதைப் பற்றிய உங்கள் கருத்து?
பதில்:
கவிதை என்றால் அதில் பொருள்தான் முக்கியம். உங்களுக்குப் பொருள் புரியவில்லையென்றால் பின்பு அதையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அதைக் கடந்து சென்றுவிடுங்கள்.
ஒருவேளை அப்படி புரியாமல் எழுதக்கூடிய ஒருவர் இது கவிதைதான் என்றால் அதற்கான முழு உரிமையும் இந்த உலகில் அவருக்கு உண்டு. அதை அவர் வைத்துக் கொள்ளட்டும். நீங்கள் எதைக் கவிதையென்று நம்புகிறீர்களோ உங்களுக்கு எது சிறப்பாக வருகிறதோ அதைப் பின்பற்றுங்கள்.
கேள்வி:
கவியரங்கக் கவிதைகளெல்லாம் கவிதைகள் இல்லை அவை வெறும் துணுக்குகள்தான் என்று கூறுகிறார்களே அதைப்பற்றி உங்கள் கருத்து?
பதில்:
முதலில் பாடத் தகுதியானதுதான் கவிதை. அதன் பெயரே பாக்கள்தான். கவியரங்கக் கவிதைகளைக் கவிதை இல்லையென்று யாரும் சொல்ல இயலாது. ஏனென்றால் அந்த வகைக் கவிதைகளுக்கு ஒரு நிகழ்த்து தன்மையுண்டு. கற்றலினும் கேட்டல் நன்றல்லவா ? கவிஞர்கள் படிக்க படிக்க நாம் கேட்க கேட்க ஓர் உணர்வைக் கடத்தும். கவியரங்கம் என்பது தொன்மையான வடிவம். அந்தக் காலத்தில் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். மக்கள், மன்னர்களெல்லாம் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். அரங்கேற்றமெல்லாம் அப்படித்தான் நடந்திருக்கிறது. அதனுடைய ஒரு வடிவம்தான் கவியரங்கம். இந்த வடிவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் இது அருகி வருவது வருத்தமளிக்கிறது.
கவியரங்கக் கவிதைகளைத் தாழ்த்தி மதிப்பிடுவதை ஏற்க இயலாது. அது கவிதையின் பன்முகத்தன்மையை உணராதவர்கள் கூறுவது.
நன்றி!
உரை : கவிஞர் மகுடேசுவரன்
எழுத்தாக்கம் : பழ.மோகன்
Complete Architecture Services
From concept to completion, our architecture services use the latest technology and techniques to deliver exceptional results.
Lifestyle-Enhancing Design
Our architecture services take into consideration your lifestyle and preferences to create spaces that are both beautiful and functional.
Collaborative Design Services
We work collaboratively with our clients throughout the design process to ensure their vision is realized in the final product.
தொடர்புக்கு
+6597844478
+6590024010
முகவரி
kmmp727@gmail.com