தனித்தமிழ் உரைகள்

குறிஞ்சித்திணை

=====

இன்றைய தனித்தமிழ் உரையில் குறிஞ்சித்திணையைப் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம். குறிஞ்சியின் கருப்பொருள்கள் பதினான்கு ஆகும். அவற்றை அகப்பொருள் விளக்கம் என்று நூல் இவ்வாறாகக் குறிப்பிடுகின்றது.

ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள்விலங்கு

ஊர்நீர் பூ மரம் அணா பறையாழ்பண்

தொழில் எனக் கருஈர் எழுவகைத்து ஆகும்.

இதில் ஈர் எழுவகைத்து என்றால் 2x7=14 பதினான்கு வகையாகும்.

அணங்கு என்றால் தெய்வம். புள்-பறவை

உணா- உணவு. மற்ற எல்லாம் நமக்குத் தெரிந்தவையே.

உலகின் மற்ற அனைத்து நாகரிகங்களிலும் தெய்வம்தான் நிலத்தைப் படைத்ததாகப் படிக்கிறோம்.ஆனால் தமிழர் நாகரிகத்தில் மட்டும் நிலம்தான் தெய்வத்தைப் படைக்கிறது. நீர், மரம், உணவு போல தெய்வமும் இங்கே கருப்பொருள்தான்.

அகத்திணையின் பாடுபொருள்களாக எழுவகை பாடுபொருள்கள் உள்ளன. புறத்திணைப் பாக்களில் இவை வந்தாலும் அங்கே உரிப்பொருளாக ஐந்திணை ஒழுக்கங்கள் வராது.

அறக்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு , இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல் , குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் ஆகியவையே ஏழு பாடுபொருள்களாகும்.

அறத்தொடு நிற்றல் என்பது களவு வாழ்க்கையைக் கற்பு வாழ்க்கையை நோக்கிச் செலுத்துவதற்காக தோழி செவிலித்தாய்க்கு உரைப்பதாகும்.

காதலிலும் போரிலும் அனைத்துமே சரிதான் என்ற கூற்றுக்குச் சற்று மாறுபட்டு அகத்திணையிலும் அறம் இங்கே சொல்லப் பட்டது. தோழி செவிலித்தாய்க்குத் தலைவியின் திருமணப் பேச்சைத் தொடங்குவதற்கான குறிப்பு எனப் பார்த்தோம். அதுவும் தோழி செவிலித்தாய்க்குத்தான் சொல்கிறாள் நற்றாய்க்கல்ல. தாய்க்கு தன் மகள் என்றும் சிறுபெண்தான் அவளின் மணத்திற்கான நேரம் வந்துவிட்டது என தோழி மூலம் சொல்வது இலக்கியத்தில் அறத்தொடு நிற்றல் ஆயிற்று.

அடுத்து வரைவு கடாவுதல். வரைவு என்றால் எல்லை. மணத்திற்கான ஒப்பந்தம். கடாவுதல் என்றால் வினவுதல். அதுவும் துருவி துருவி வினவுதல். தோழி தலைவனிடம் தன் தலைவியை எப்போது மணம் செய்துக் கொள்ளப்போகிறாய் எனக் கேட்பது விரைவுகடாவுதல். தலைவன் பதில் சொல்லும்வரை திரும்ப திரும்பக் கேட்பது வரைவு கடாவுதல் எனப்பட்டது.

அடுத்ததாக இற்செறிப்பு - தலைவியை அவள் பெற்றோர் இல்லத்தில் வீட்டுக்காவலில் வைக்கும் நிலை. காவலில் இருக்கும்போது தலைவன் இரவில் தலைவியைச் சந்திக்க இயலாது. தலைவன் தலைவி துன்பத்தைப் பாடுவதும், தலைவனை இனி நீ பகலிலேயே வந்துபோ என்று மணத்தை நோக்கி தலைவனைச் செலுத்துவதும் இற்செறிப்பாகும்.

இரவுக்குறி- இங்கே குறி என்பது இடம். இரவில் தலைவன் தலைவியைச் சந்திக்கும் போது வரும் இடர்கள்- காட்டுவழி, திணைப்புனம் காப்பவர்களிடமிருந்து தப்பிப்பது, சிறு விலங்குகளிடமிருந்து தப்பிப்பது போன்றவை இரவுக் குறியில் பாடப்படும்.

அடுத்ததாக குறிஞ்சியைப் போற்றல் - குறிஞ்சி நிலத்தில் அரிதான பூ குறிஞ்சிப்பூ. எனவே அதைப் போற்றிப் பாடுவதும் தலையாய பாடுபொருளாகக் கொள்ளப் படுகிறது.

குறி கேட்டல்- அகவன் மகளான குறத்தியிடமிருந்து குறி கேட்பது. இங்கே குறி கேட்பது என்பது எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு அன்று. தோழியானவள் தலைவியைப் பற்றி குறத்தியிடம் தன் தலைவி பசலையால் வாடுகிறாள் அதன் காரணமென்ன எனக் கேட்கிறாள்; குறத்தியிடமிருந்து பதிலை எதிர்ப்பார்க்கவில்லை. செவிலித்தாய்க்குத் தலைவியின் நிலையைக் குறிப்பால் உணர்த்தவே கேட்கிறாள்.

இறுதியாக தினைப்புனம் காத்தல் வருகிறது. புனம் என்றூல் கொல்லை. தினை விளையும் கொல்லையை கிளி போன்ற பறவைகளிடமிருந்துக் காப்பது. புலம் என்றால் இடம் என நமக்குத் தெரியும். ல-ன-ற இணை என்பதால் புனம் புலம் ஏறக்குறைய ஒரே பொருளைத் தருகின்றன.

இனி எந்த குறிஞ்சித்திணைப் பாடலைப் பார்த்தாலும் அதன் பாடுபொருளையும் நோக்குவோம். நன்றி!